கோலாலம்பூர்: மலேசியா செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் பயனாளராக மட்டுமே இருந்துவிடாமல் அத்துறையில் தனது ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அந்நாட்டின் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியா தனது செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் உலகளவில் தனது போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 27) நடைபெற்ற ஹுவாவெய் ‘ஏஐ’ ஆய்வுக்கூடம், புத்தாக்க நிலையத்தின் திறப்பு விழாவுக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் தானும் சென்றதாகப் அமைச்சர் ஃபாமி கூறினார்.
நாட்டின் மின்னிலக்க உருமாற்றம் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய இணையப் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஹுவாவெய் ‘ஏஐ’ ஆய்வுக்கூடம், புத்தாக்க நிலையம் ஆசிய பசிபிக் வட்டாரத்துக்குச் சேவை செய்யவுள்ளது.
மொத்தம் 13,638 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த நிலையம், மின்னிலக்க மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கான ஹுவாவெயின் அண்மைத் தீர்வுகள் மற்றும் செயல்பாடுகளை வெளிப்படுத்த போதுமான இடத்தை வழங்குகிறது.
இந்த ஆய்வுக்கூடம் புத்தாக்க ஒத்துழைப்பையும் வலுவான சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அத்துடன், அதிகமான மலேசிய செயற்கை நுண்ணறிவுத் திறனாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் தொழில்துறை மற்றும் கல்வித் துறைப் பங்காளிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

