கோலாலம்பூர்: தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களுக்கு எதிராக சமூக ஊடகத் தளங்கள் விரிவான, தானியங்கி நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதைச் சரிசெய்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனீசியா ஆகிய நாடுகள் டிசம்பர் மாத நடுப்பகுதியில் கலந்துரையாடல்களை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய உள்ளடக்கங்களைக் கையாள்வதில் மின்னிலக்கத் தள வழங்குநர்களின் போதிய ஒத்துழைப்பின்மையால் எழும் பொதுவான சவால்களைப் பற்றி விவாதிக்க, இந்த இரண்டு அண்டை நாடுகளின் அமைச்சர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக மலேசியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படத் திரிபு அல்லது வன்போலிகள் உள்ளிட்ட மீண்டும் மீண்டும் வரும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கையாள்வதில், சமூக ஊடகத் தளங்கள் பொறுப்புடன் செயல்பட அதிக அழுத்தம் கொடுக்க வட்டார ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
“இந்தத் தளங்கள் செவிசாய்ப்பதை உறுதிசெய்ய, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நமது நட்பு நாடுகளுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.
“சிங்கப்பூர் பல சமூக ஊடகத் தளங்களின் வட்டாரத் தலைமையகமாகக் கருதப்படுகிறது. இந்தோனீசியாவில் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் உள்ளனர். அதே வேளையில் மலேசியாவில் பல தரவு மையங்கள் அமைந்துள்ளன,” என்று அவர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் தெரிவித்தார்.
அரசாங்கமும் மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையமும் எதிர்கொள்ளும் முக்கியச் சவால்களில் ஒன்று, சமூக ஊடகத் தளங்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததுதான் என்று அமைச்சர் கூறினார். இந்தத் தளங்கள், மீண்டும் மீண்டும் விடுக்கப்படும் புகார்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று தெரிகிறது.
ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025ன் கீழ், இடர் தணிப்புக் குறியீட்டிற்கு இணங்க தானியங்கி செயல் கட்டமைப்பை நிறுவுவதற்கு இந்த ஆண்டு இறுதி வரை இணையவழி சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கம் அவகாசம் அளித்துள்ளதாக திரு ஃபஹ்மி கூறினார்.
காலக்கெடுவிற்குப் பிறகும் இணங்கத் தவறிய தளங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒரு மில்லியன் முதல் 10 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
