புத்ராஜெயா: கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 31,790 ஆகப் பதிவான டெங்கி சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நாடு தழுவிய அளவில் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்றைய (ஜூலை 9) நிலவரப்படி 34.8 விழுக்காடு அதிகரித்து 42,848 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கி தொடர்பான மரணங்கள் 78.9 விழுக்காடு அதிகரித்து 34 ஆக உயர்ந்துள்ளன. இது 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 19 ஆக இருந்தது என்று வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வெளியிட்ட ஓர் அறிக்கையில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியாவில் பதிவான மொத்த டெங்கி பாதிப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 63.5 விழுக்காடு, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் பதிவாகியுள்ளன என்று நோய்ப்பரவல் ஆய்வு காட்டியது.
சிலாங்கூரில் 19,313 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 43.2 விழுக்காடு அதிகமாகும். அதேசமயம், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் 7,909 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 83.8 விழுக்காடு அதிகமாகும்.
ஜோகூர், சாபா, நெகிரி செம்பிலான், பேராக், சரவாக், பெர்லிஸ், திரெங்கானு, லபுவான் ஆகிய இடங்களிலும் அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
“கிள்ளான் பள்ளத்தாக்கு நாட்டின் முக்கிய டெங்கி பாதிப்புப் பகுதியாகத் தொடர்கிறது. மேலும் அதற்குத் தீவிரமான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
“கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பல மாநிலங்களில் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாகியிருந்தாலும், இது அலட்சியத்திற்கு வழிவகுக்கக் கூடாது.
“நோய்ப்பரவல், சுற்றுச்சூழல், வானிலை நிலவரங்களைப் பொறுத்து நிலைமை விரைவாக மாறக்கூடும் என்பதால், அனைத்து மாநிலங்களும் டெங்கி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி நிலைநிறுத்த வேண்டும்,” என அமைச்சு வலியுறுத்தியது.
விரைவான நகரமயமாக்கல், மக்கள் இடம்பெயர்வு, சுற்றுச்சூழல் நிலைமைகள், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகச் செயல்படும் நீர்த் தேக்கங்கள், நோய்க்கடத்தி கட்டுப்பாட்டுத் திட்டங்களின் செயல்திறன், பரவல் மற்றும் நிலைத்தன்மை, அத்துடன் ஏடிஸ் இனப்பெருக்க இடங்களை அகற்றுவதில் சமூகத்தின் தீவிரப் பங்கேற்பு ஆகியவை பிற பங்களிப்புக் காரணிகளாகும்.
டெங்கி நிலவரத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், சிக்கல்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக பெர்னாமா தெரிவித்தது.

