ஜோகூர் பாரு: மலேசியாவில் 16 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதைப் பெற்றோர் பலரும் வரவேற்றுள்ளனர்.
இந்நடவடிக்கை, பிள்ளைகளைப் பாதுகாக்க மிகவும் அவசியமானது என்று மலேசியாவில் உள்ள பெற்றோர் பலர் கூறுகின்றனர். வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி இத்தடை நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் மின்னிலக்கத் தளப் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வன்முறை, பாலியல் விவகாரங்கள் ஆகியவற்றைக் காட்டும் பதிவுகள் குறித்து கவலைகள் இருந்து வருவது அதற்குக் காரணம். இணையத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் பதிவுகளும் அவற்றில் அடங்கும்.
பெரியவர்களுக்காக உருவாக்கப்படும் சமூக ஊடகப் பதிவுகளைப் பிள்ளைகள் பார்த்துவிடாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வது முக்கியம் என்கிறார் இரு பதின்ம வயது மகன்களுக்குத் தாயான ஆர். சித்ரா, 46.
“பிள்ளைப் பருவத்தை அனுபவிக்க சிறாருக்கு வழிகாட்டவேண்டும். அவர்கள் பெரியவர்களாக உருவெடுக்க அவசரப்படக்கூடாது. அவர்கள் தங்களுக்குப் பொருந்தாத பதிவுகளைப் பார்க்கக்கூடாது,” என்று உதவியாளராகப் பணிபுரியும் திருவாட்டி சித்ரா கருத்துரைத்தார்.
இணையத்தில் அதிலும் குறிப்பாக, சமூக ஊடகத் தளங்களில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் பதிவுகள் தனக்கு அதிக கவலை தருவதாக இல்லத்தரசியான 29 வயது ரெபெக்கா வோங் கூறினார்.
“ஒரு பதிவு உண்மையானதுதானா அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதா என்பதை சில வேளைகளில் பெரியவர்களால்கூட பிரித்துப் பார்க்க முடியாது.
“சமூக ஊடகங்களில் அதிகமான தகாத வார்த்தைகள் புழங்கப்படுகின்றன. பிள்ளைகள் இவ்வளவு இளம் வயதில் அவற்றைப் பார்ப்பதை சாதாரணமான ஒன்றாக ஆக்கிவிடக்கூடாது,” என்று திருவாட்டி ரெபெக்கா குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அண்மைக் காலமாக வன்முறைச் சம்பவங்களில் சிறார் பலர் சம்பந்தப்பட்டிருப்பதும் சமூக ஊடகத் தடைக்கான அவசியத்தை எடுத்துக் காட்டுவதாக நிர்வாக உதவியாளராகப் பணிபுரியும் ஆய்ஷா முகம்மது யூசோஃப், 38, செய்தியாளர்களிடம் கூறினார்.
“என்னதான் பிள்ளைகளைக் கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்றாலும் அரசாங்கம் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் கட்டுப்பாடுகளை விதிப்பது நன்கு உதவும்,” என்று அவர் விளக்கினார்.

