மலேசிய சட்டமன்றத் தேர்தல்: 3-3 எனத் தக்கவைத்துக்கொண்ட பிஎச், பிஎன் கூட்டணிகள்

2 mins read
fe91eecc-ae99-4efe-b939-fa446e5fb9e8
ஆகஸ்ட் 12ஆம் தேதி மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் அன்வார் இப்ராகிம் உரையாற்றினார். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் ஆறு மாநில சட்டமன்றங்களுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கத் தரப்பும் எதிர்த்தரப்பு பெரிக்கத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணியும் ஏற்கெனவே ஆண்டுவந்த மாநிலங்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளன.

கிளந்தான், கெடா, திரெங்கானு ஆகிய மாநிலங்களை பிஎன் கூட்டணி தக்கவைத்துக்கொண்டதாக மலேசியத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை இரவு அறிவித்தது.

அந்தக் கூட்டணி மூன்றில்-இரண்டு பங்கு தொகுதிகளில் வெற்றிபெற்றிருப்பதாக அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகும் முன்பே தெரியவந்தது.

பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் (பிஎச்) கூட்டணியும் ஆளும் ஒற்றுமை அரசாங்கக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரிசான் நேஷனல் கூட்டணியும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களில் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சனிக்கிழமை நடந்த வாக்களிப்புக்குப் பிறகு, ஏறத்தாழ ஏழு மில்லியன் வாக்குகள் எண்ணப்பட்டதாகக் கூறப்பட்டது.

நெகிரி செம்பிலானில் பக்கத்தான் ஹரப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணி 31 இடங்களிலும் பிஎன் 5 இடங்களிலும் வெற்றிபெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் தேர்தல் முடிவுகள், பக்கத்தான் ஹரப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு மக்களின் ஆதரவைக் காட்டுவதாக பிஎச் கூட்டணியின் மாநிலத் தலைவர் அமிருதீன் ஷாரி கூறினார். புதிய கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தில் 34 இடங்களில் வெற்றிபெற்ற வேளையில் எதிர்த்தரப்பு பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி 22 இடங்களில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், திரெங்கானு மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற 32 தொகுதிகளிலும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி அபார வெற்றி அடைந்தது.

வரலாற்றில் முதல்முறையாக அந்த மாநில சட்டமன்றத்தில் எதிர்த்தரப்புக்கு ஓர் இடம்கூட கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரெங்கானுவில் ஆக அதிகமாக 74.49 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இவ்வேளையில், பினாங்கில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர் சோ கோன் இயோ, மாநில முதல்வராக இன்று பதவியேற்பார் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்