கோலாலம்பூர்: மலேசியாவில் தண்ணீர்த் திருட்டு, நீர்க் கசிந்தபடி இருக்கும் தண்ணீர்க் குழாய்கள், பழமையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு மாநிலங்களில் அதிக அளவு நீர் வீணாவதாக அந்நாட்டுத் துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்நாட்டின் ஒட்டுமொத்த நீர்த் திறனை அது பாதிப்பதாகவும் உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
ஒவ்வொரு சொட்டு நீரும் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, கண்காணிப்பை வலுப்படுத்துவது, நீர் வீணாகும் விகிதத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் எரிசக்தி, நீர்வளத் துறை அமைச்சராகவும் இருக்கும் அவர், நீர் வளத் துறையின் கொள்கைகளையும் அதன் செயல்பாடுகளையும் நிலையான, ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் வலுப்படுத்த அந்நாட்டு அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.
நீர் விநியோகத்தைத் துல்லியமாக கண்காணிக்கத் திறன்மிக்க நவீனத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது, நீர் வளங்களை முறையாக நிர்வகிப்பது, நாட்டின் நீர்ப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அனைத்து அரசு அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கையும் அவற்றில் அடங்கும் என அந்தப் பதிவில் அவர் விவரித்தார்.
மலேசியா இயற்கை வளங்கள் நிறைந்த நாடாக இருந்தாலும், நீர் ஆதாரங்கள் மாசுபடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என அவர் எச்சரித்துள்ளார்.
பொறுப்பற்ற முறையில் நீர் நிலைகளில் கழிவுகளைக் கொட்டுவது, மாறுபட்ட முறையில் நிலத்தைப் பயன்படுத்துவது போன்றவை ஆறுகள், அணைகளுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
அரசின் முயற்சிகள் மட்டும் போதாது எனக் குறிப்பிட்ட மலேசியத் துணைப் பிரதமர், பொதுமக்கள் நீர் சேமிப்பைத் தங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், வீடுகளில் ஏற்படும் நீர்க் கசிவுகளைச் சரிசெய்வது, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது போன்ற சிறிய செயல்கள்கூட நாட்டின் நீர் பாதுகாப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

