தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உள்ளூர் அரிசி விற்பனை தேக்கம்: ஊக்குவிப்பு முயற்சியில் மலேசியா

2 mins read
6be9e56b-c7b9-48b1-8532-1172a44b0cdd
மலேசிய அரிசிக்கும் இறக்குமதி அரிசிக்கும் விலையில் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறப்படுகிறது. - படம்: ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியச் சந்தையில் உள்ளூர் அரிசி விற்பனை மந்தம் அடைந்ததைத் தொடர்ந்து அதற்கான காரணத்தை தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாக வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மது சாபு தெரிவித்துள்ளார்.

“பத்து கிலோ உள்ளூர் வெள்ளை அரிசியின் விலை 26 ரிங்கிட்டிற்கு விற்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலையுடன் அது அதிகமாக வேறுபடவில்லை. எனவே, உள்ளூர் அரிசியின் விற்பனை தேங்கிப் போகிறது,” என்று அவர் சனிக்கிழமை (செப்டம்பர் 6) செய்தியாளர்களிடம் கூறினார்.

கிளந்தானின் கோத்தா பாருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், உள்ளூரில் விளைவிக்கப்பட்டு அறுவடை செய்த அரிசியை வாங்குமாறு பிரசார இயக்கத்தை அரசாங்கம் தொடங்க இருப்பதாகத் தெரிவித்தார்.

உள்ளூர் வெள்ளை அரிசிக்கு மானியம் வழங்கும் சிறப்புத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்குப் பின்னால், அரிசி விலை நிலையாக 1 கிலோ 2.60 ரிங்கிட் என்ற அளவில் தொடருவதை அரசாங்கம கண்காணித்து வருவதாகவும் திரு சாபு கூறினார்.

அதேபோல, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் முட்டைக்கான மானியம் ரத்து செய்யப்பட்ட பின்னரும் விலைகள் கட்டுக்குள் இருக்கிறது என்றார் அவர்.

“விலைவாசி கட்டுக்குள் உள்ளது. உணவுப் பொருள்களைப் பொறுத்தமட்டில் எல்லாம் செய்தாகிவிட்டது என்று நாம் மார்தட்டிக் கொள்ள முடியாது. இருப்பினும், விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதால் நிம்மதியாக இருக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்,” என செய்தியாளர்களிடம் திரு சபு தெரிவித்தார்.

ஒரு முட்டைக்கு பத்து காசு மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் மே 1 முதல் அது ஐந்து காசாகக் குறைக்கப்பட்டு, ஆகஸ்ட் 1 முதல் மானியம் முற்றாக நீக்கப்பட்டுவிட்டது. 

உணவுப்பொருள்கள் உண்மையிலேயே தேவைப்படுவோருக்கு உதவுவதை இலக்காகக் கொண்டு விலைகள் மறுசீரமைக்கப்பட்டதாக மலேசிய அரசாங்கம் அப்போது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்