மலேசியா: மூவாண்டுகளில் 480,000 வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு அழைப்பாணை

மலேசியா: மூவாண்டுகளில் 480,000 வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு அழைப்பாணை

படம்: தி ஸ்டார்

07 Feb 2026 - 12:48 pm

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காகக் கடந்த மூன்று ஆண்டுகளில் 482,742 வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு 25.3 மில்லியன் ரிங்கிட் (S$8.15 மில்லியன்).

ரோஹிங்யா, பங்ளாதேஷியர், இந்தோனீசியர், மத்தியக் கிழக்கு நாட்டினர், இந்தியர், சீனர் உள்ளிட்டோர்க்கே அடிக்கடி அழைப்பாணைகள் விடுக்கப்பட்டதை ஆவணங்கள் காட்டுகின்றன.

மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை அமலாக்க இயக்குநர் முகம்மது கிஃப்லி மா ஹாசன் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

“2023-2025 ஆண்டுகளில் 462,835 வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக அழைப்பாணைகள் விடுக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

அத்துடன், அதே காலகட்டத்தில் வெளிநாட்டவர்கள் ஓட்டிய 15,789 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் திரு கிஃப்லி தெரிவித்தார்.

முறையான உரிமமின்றி வாகனம் ஓட்டுதல், சாலை வரி செலுத்தாமை, போதிய காப்புறுதி இல்லாமை, அனுமதியின்றி வாகனத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காகப் பெரும்பாலோர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 5, 6ஆம் தேதிகளில் சாலைப் போக்குவரத்துத் துறை மேற்கொண்ட சோதனைகளில் 330 அழைப்பாணைகள் விடுக்கப்பட்டன; 61 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 57 வெளிநாட்டு ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டனர்.

சாலைப் பயனர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என்றும் திரு கிஃப்லி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாசாலைப் பாதுகாப்புபோக்குவரத்துவெளிநாட்டவர்ஓட்டுநர்ஓட்டுநர் உரிமம்வாகனம்