அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதியைக் குறைக்க மலேசியா நடவடிக்கை

அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதியைக் குறைக்க மலேசியா நடவடிக்கை

படம்: அன்ஸ்ப்ளா‌‌ஷ்

30 Jul 2026 - 6:24 pm

2 mins read

கோலாலம்பூர்: அத்தியாவசிய பொருள்களின் இறக்குமதியைக் குறைக்க மலேசியா நடவடிக்கை எடுத்துவருகிறது. உள்நாட்டில் வேளாண் உணவுப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதில் கவனம் செலுத்துவதாக வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

மொத்த உள்நாட்டுத் தேவையைச் சொந்த உற்பத்தியின் மூலம் நிறைவேற்றும் விகிதம் குறைவாக உள்ள உணவுப்பொருள்கள் அவற்றில் முக்கிய இடம்பெறும்.

கூடுதல் கவனம் தேவைப்படும் உணவுப்பொருள்களில் இஞ்சி, மாம்பழங்கள், அரிசி, பால் முதலியவை அடங்கும். வேளாண், உணவுப் பாதுகாப்புத் துணை அமைச்சர் சான் ஃபூங் ஹின் அவ்வாறு தெரிவித்தார்.

அந்த விகிதத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.

“அனைத்து உணவுப் பயிர்களும் மலேசியாவில் பயிரிடுவதற்கு ஏற்றவை அல்ல. எனவே கருத்தில் கொள்ளப்படவேண்டிய மற்ற வணிகக் காரணிகளும் உள்ளன,” என்றார் திரு சான்.

டேவான் நெகாராவில் நடைபெற்ற கேள்வி-பதில் அங்கத்தில் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

கால்நடைத் தீவனங்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்வதற்காகத் தானியச் சோளம் உட்பட அத்தியாவசிய பொருள்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துவருவதாகத் திரு சான் சொன்னார்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதுடன் உணவு விநியோகத் தயார்நிலையையும் அரசாங்கம் வலுப்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.

இது ஆறு மாதங்களுக்கும் மேல் தேவையான தேசிய தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானது என்றும் திரு சான் குறிப்பிட்டார்.

மேலும், ‘தேசிய வேளாண்-உணவு அதிகாரமளித்தல் திட்டத்தின்’ கீழ் ஒத்துழைப்பு, நிதியுதவி மூலம், சாபா, சரவாக்கின் கிராமப்புறங்களில் உள்ள உணவு விநியோகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவேளாண்அமைச்சுஇறக்குமதிஉணவுப்பொருள்