வரலாற்று ஆவணங்களைக் காப்பதில் மலேசிய, தமிழக அரசாங்கங்கள் ஆர்வம்

வரலாற்று ஆவணங்களைக் காப்பதில் மலேசிய, தமிழக அரசாங்கங்கள் ஆர்வம்

2 mins read
b514f383-24b5-4c7d-999c-33c7545cb748
மலேசியாவின் தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் சென்னை எழும்பூரில் உள்ள ஆவண ஆராய்ச்சிக்கூடத்தைப் பார்வையிட்டார். - படம்: யுவனேஸ்வரன் ராமராஜ்/ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: வரலாறுகளை உள்ளடக்கிய மரபுடைமை ஆவணங்களைக் காப்பதில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசிய அரசாங்கமும் தமிழ்நாட்டு அரசாங்கமும் முயன்று வருகின்றன.

மலேசியாவின் தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் அரசுமுறைப் பயணமாக அண்மையில் தமிழ்நாட்டுக்கு சென்றிருந்தபோது சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கூடத்தைப் பார்வையிட்டார்.

தமிழ்நாடு மற்றும் முன்னாள் சென்னை மாகாணம் தொடர்பான வரலாற்று ஆவணங்கள், அரசு ஆவணங்கள், கையெழுத்துப்படிகள் மற்றும் ஆராய்ச்சிப் பொருள்களை அந்த ஆராய்ச்சிக்கூடம் பாதுகாத்து வருகிறது.

திரு யுனேஸ்வரன் அங்கு சென்றதன் மூலம் ஆவணக் காப்பக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக ‘பெர்னாமா’ குறிப்பிட்டுள்ளது.

தமது பயணம் தொடர்பாக திரு யுனேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவணக் காப்பகங்கள் அறிவு மையங்களாகவும் தேசிய நினைவகங்களாகவும், ஒரு சமூகத்தின் மரபுச் செல்வங்களைப் பாதுகாத்து வைக்கும் களஞ்சியங்களாகவும் ஆற்றும் பங்கைப் புரிந்துகொள்வதில் இந்த வருகை ஓர் அர்த்தமுள்ள அனுபவமாக அமைந்தது,” என்று கூறினார்.

“தேசிய ஆவணங்கள், அதிகாரபூர்வ அரசு ஆவணங்கள், எழுத்துசார் மரபுகள் ஆகியவற்றை நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கான மேற்கோள்களாக பாதுகாப்பதில் ஆவணக்காப்பகங்களின் பங்கு மிக முக்கியமானது.

“ஆவணக் காப்பகங்கள் என்பவை பழைமையான அல்லது சலிப்பூட்டக்கூடிய இடங்கள் அல்ல. மாறாக, ஒரு சமூகத்தின் தோற்றம், கலாசாரம், மொழி மற்றும் அடையாளத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும் அறிவு மையங்கள் அவை,” என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்து வந்த வரலாறுகளை வெறும் கதைகளாக மட்டும் கருதாமல், அடையாளம் மற்றும் பண்பாட்டு நற்பண்புகளில் வேரூன்றிய ஓர் எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான வழிகாட்டுதலாகப் பார்க்க வேண்டும் என்று இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக திரு யுனேஸ்வரன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஅமைச்சர்ஆராய்ச்சி