மலேசிய - தாய்லாந்து எல்லை: உயர் பாதுகாப்பு வேலிகளுக்கு நிதிக் கோரிக்கை

மலேசிய - தாய்லாந்து எல்லை: உயர் பாதுகாப்பு வேலிகளுக்கு நிதிக் கோரிக்கை

2 mins read
a85dcb94-099b-4b51-810f-ea4cd6df8a11
மலேசிய - தாய்லாந்து எல்லைப் பகுதியில், பாசிர் மாஸ் எனும் இடத்தில் உள்ள வேலிக் கட்டுமானத் தளத்தில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும் பொதுச் செயல்பாட்டுப் படை அதிகாரி. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

தும்பாட்: மலேசிய - தாய்லாந்து எல்லைப் பகுதியில் இடிக்கப்பட்ட 69 சட்டவிரோதப் படகுத்துறைகளில் உயர் பாதுகாப்புக் கம்பிகளைப் பொருத்த, தேசிய பாதுகாப்பு மன்றத்தின் வாயிலாக, பொதுச் செயல்பாட்டுப் படை மலேசிய அரசாங்கத்திடமிருந்து கூடுதல் நிதிக்கு விண்ணப்பிக்கவிருக்கிறது.

இதற்கு முன்னர், ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பின் நடவடிக்கையில் இடிக்கப்பட்ட 97 சட்டவிரோதப் படகுத்துறைகளில் 27ல் முள்வேலிகள் பொருத்தப்பட்டதாகப் படையின் தென்கிழக்காசியப் படைத்தொகுதித் தளபதி அகமது ரட்ஸி ஹுசெய்ன் கூறினார்.

“எஞ்சியிருக்கும் 69 சட்டவிரோதப் படகுத்துறைகளிலும் அதே மாதிரியான முள்வேலிகள் பொருத்தப்படும். அதற்காகக் கூடுதல் நிதியுதவி கோருகிறோம்,” என்றார் அவர்.

முன்னதாக, பிரதமர் துறையின் செயலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவின் ஒப்புதலோடு வழங்கப்பட்ட 100,000 ரிங்கிட் நிதியைக் கொண்டு, 1.5 கிலோமீட்டர் தூரத்திற்குக் குத்தகையாளர் ஒருவர் முள்வேலிகளைப் பொருத்தியதாக அவர் கூறினார்.

முள்வேலிகளைப் பொருத்துவதன் மூலம், கடத்தல் நடவடிக்கைகளும் மற்ற எல்லைத் தாண்டிய குற்றங்களும் குறையக்கூடும் என்று தாம் நம்புவதாகத் திரு அகமது ரட்ஸி கூறினார்.

அத்தகைய குற்றச்செயல்கள் சட்டவிரோதத் தளங்கள் மூலம் தொடர்ந்து நடப்பதாக அவர் சொன்னார்.

முள்வேலிகளைப் பொருத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கை, ரந்தாவ் பஞ்சாங் நகரிலிருந்து போஸ் இப்ராஹிம் பென்சென் பகுதிவரை 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள ‘பார்க்கிங்’ எனும் சட்டவிரோதத் தளத்தில் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

“முன்னதாக இடிக்கப்பட்ட சட்டவிரோதத் தளங்களில் உள்ள 27 இடங்கள் முள்வேலி பொருத்தும் திட்டத்திற்கு அடையாளம் காணப்பட்டுள்ளன,” என்றார் திரு அகமது ரட்ஸி.

இருப்பினும், எஞ்சியுள்ள 69 இடங்களில் முள்வேலி பொருத்தும் பணியை மேற்கொள்வதற்காகக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிதியின் அளவை அவர் குறிப்பிடவில்லை.

குறிப்புச் சொற்கள்
கடத்தல்மலேசியாவேலி

தொடர்புடைய செய்திகள்