பெட்டாலிங் ஜெயா: வெளிநாடுகளில் வேலைசெய்யும் மலேசியர்கள் எந்த நேரத்தில் நாடு திரும்பினாலும் அவர்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது என்று மலேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
மலேசியத் திறனாளர் மன்றம் (TalentCorp) வாயிலாக வேலை மற்றும் வாழ்க்கைத் தொழில் தொடர்பான வழிகாட்டுதல்களை அவர்கள் பெறலாம் என்றும் திரு ரமணன் கூறியுள்ளார்.
நாடு திரும்பும் நிபுணர்கள் இங்கேயே நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைளை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது.
அவர்களுக்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தருவது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்,” என்று, மலேசியத் திறனாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூர் போன்ற அருகிலுள்ள நாடுகள் அதிகமான சம்பளத்தைத் தரலாம். அதேநேரம் அங்கு வாழ்க்கைச் செலவினமும் அதிகம்.
“மலேசிய நிபுணர்கள் நாடு திரும்புவதை வெறும் சம்பளத்தை வைத்து மட்டும் மதிப்பிட்டுவிட முடியாது. அவர்களை தாய்நாட்டுக்கு வரவழைப்பதில் உள்ள சவால்களைச் சமாளிக்க முழுமையான அணுகுமுறை அவசியம்,” என்றார் திரு ரமணன்.
இளம் தலைமுறையினருக்கான வேலைச் சந்தை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், மாணவர்களுக்கும் வேலை தேடுவோருக்கும் ‘மைநெக்ஸ்ட்’ (MyNext) என்னும் தளம் உதவி வருவதை சுட்டிக்காட்டினார்.
“மாணவர்கள் பட்டம் பெற்ற பின்பு அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும்போது மைநெக்ஸ்ட் அவர்களுக்கு வழிகாட்டும்.
தொடர்புடைய செய்திகள்
“தகுதியான வேலைகளையும் வாழ்க்கைத் தொழிலையும் தேடித் தர அது உதவிக்கரம் நீட்டும்,” என்றார் அவர்.
வெவ்வேறு வேலைகளுக்குப் பொருந்தக்கூடிய ஒவ்வொரு மாணவரின் தகுதியையும் திறமையும் மைநெக்ஸ்ட் தளம் மதிப்பிடும் என்று மலேசியத் திறனாளர் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எட்வர்ட் லிங் தெரிவித்தார்.
“உதாரணத்திற்கு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் வேலை தேடுகிறீர்கள் எனில், அதற்கு நீங்கள் பொருத்தமானவரா என்பதை ஆராய்ந்து, தேவைப்பட்டால் நீங்கள் திறன்மேம்பாடு செய்துகொள்ள அந்தத் தளம் யோசனை வழங்கும்,” என்றார் அவர்.

