தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா-யுஏஇ செயற்கை நுண்ணறிவு ஒப்பந்தம்

2 mins read
06196c27-1c06-45a3-be12-84acb9e244c6
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) அதிபர் ‌ஷேக் முகம்மது பின் ஸாயத் அல்-நஹ்யானைச் (வலது) சந்தித்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். திரு அன்வார் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார். - படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: மலேசியாவின் மதானி (MADANI) செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தின் ஓர் அங்கமாக செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்புக்கு மெருகூட்ட அந்நாடு, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுடன் (யுஏஇ) இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.

குற்றச் செயல்களைத் தடுத்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பங்காளித்துவம் வகைசெய்யும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில், புதிய பங்காளித்துவம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் உருமாற்ற ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள உதவும் என்றும் திரு அன்வார் குறிப்பிட்டார்.

“இதற்கான கடப்பாட்டை, மலேசியாவுக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் இடையே கையெழுத்தான இணக்கக் குறிப்பு அழுத்தந்திருத்தமாக எடுத்துக்காட்டியுள்ளது. இதன் மூலம் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை மையமாகக் கொண்டு மேலும் பாதுகாப்பான, நிலையான சமூகங்களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும்,” என்றார் திரு அன்வார்.

“புதிய மைல்கல்லாக விளங்கும் இந்நிகழ்வை நேரில் காணும் பெருமை எனக்குக் கிடைத்தது. உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியன் இஸ்மாயிலும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் முதலீட்டு அமைச்சர் முகம்மது ஹசானும் அதில் கையெழுத்திட்டனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியா, ஆசியான் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை இவ்வாண்டு ஏற்றுக்கொள்ள இருக்கிறது. அதேவேளை, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், மத்திய கிழக்கு ஒத்துழைப்பு மன்றத்தின் (ஜிசிசி) தலைவராகப் பொறுப்பு வகிக்கிறது.

இத்தகைய சூழலில், செயற்கை நுண்ணறிவில் அரசாங்க, தனியார் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் ஆசியான்-ஜிசிசி பொருளியல் மாநாடு போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டதாக திரு அன்வார் தெரிவித்தார். அதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், சிக்கலான உலகப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு வட்டார அரசியல் தலைவர்கள், தொழில்துறைத் தலைவர்கள், புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோர் ஆகிய தரப்பினரை ஒன்றுசேர்க்கும் என்றும் திரு அன்வார் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்