புகைமூட்டப் பிரச்சினையை சமாளிப்பதற்கான வழிமுறைகளை ஆசியான் மறுஆய்வு செய்யவேண்டும்: மலேசியா

புகைமூட்டப் பிரச்சினையை சமாளிப்பதற்கான வழிமுறைகளை ஆசியான் மறுஆய்வு செய்யவேண்டும்: மலேசியா

2 mins read
342e336a-1919-499f-b1e8-b8e14b8a4719
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) தோட்டப் பயிர் அமைச்சின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார். - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

புத்ராஜெயா: எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினையை எதிர்கொள்வதில் தற்போதுள்ள வழிமுறைகளை ஆசியான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்வது மக்களின் சுகாதாரத்தில் ஏற்படும் மோசமான பாதிப்புகளைத் தவிர்க்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின், குறிப்பாக குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் சுகாதாரத்திலும் வாழ்க்கையிலும் புகைமூட்டம் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஆசியான் அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்றார் திரு அன்வார்.

“வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆசியான் அமைச்சர்கள் இதன் மீது கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இது உயிர்களைப் பாதிக்கிறது, குறிப்பாகக் குழந்தைகளையும் கைக்குழந்தைகளையும் பாதிக்கிறது,” என்று அவர் கூறினார்.

நிதியமைச்சருமான திரு அன்வார், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) தோட்டப் பயிர் அமைச்சின் ஊழியர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்தோனீசியாவில் நிகழும் திறந்தவெளி எரிப்புக்கான காரணம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட திரு அன்வார், எந்தவொரு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு அல்லது குற்றம்சாட்டுவதற்கு முன்பாக தீ விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்றார்.

இந்தோனீசியாவில் இயங்கும் மலேசிய நிறுவனங்கள் புகைமூட்டப் பிரச்சினையில் ஏதேனும் தவறு செய்துள்ளனவா என்று கேட்கப்பட்டதற்கு, இந்தோனீசிய அதிகாரிகள் மேற்கொள்ளும் எந்தவொரு சட்டபூர்வ நடவடிக்கையையும் மலேசியா மதிக்கும் என்றார் அவர்.

சரவாக் மாநிலத்தின் செரியான் வட்டார காவல்துறைத் தலைமையகத்தில் உள்ள கண்காணிப்பு நிலையம் செவ்வாய்க்கிழமை காலை 302 என்ற காற்று மாசுக் குறியீட்டைப் பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து அங்கு காற்றின் தரம் மீண்டும் ஆபத்தான நிலைக்குத் திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காற்றின் தரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) செரியான் பிரிவு முழுவதிலும் புகைமூட்ட அவசரநிலையைப் பிரகடனம் செய்தார்.

அந்த அவசரநிலை திங்கட்கிழமை மீட்டுக்கொள்ளப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
புகைமூட்டம்அன்வார் இப்ராகிம்ஆசியான்