ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் மண்டலத்தில் ஹலால் தொடர்பான தொழில்களுக்கு முதலீடுகள் தரும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்குவது குறித்து மலேசிய அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்று அந்நாட்டு துணைப் பிரதமர் அகமது சாகித் ஹமிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் அன்வார் இப்ராகிமிடம் புதன்கிழமை (ஜூன் 5) பேசவுள்ளதாக சாகித் ஹமிதி கூறினார்.
திரு அன்வாரின் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஹலால் தொடர்பான தொழில்களுக்கான வரிச்சலுகை குறித்து பேசலாம் என்று திரு சாகித் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஹலால் துறை வளர்ந்து வரும் துறை என்பதால் உள்ளூர் தொழில் முனைவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் உணவு பானத் துறையில் மட்டும் ஹலால் தொடர்பாக கவனம் செலுத்தாமல் மற்ற துறைகளிலும் ஹலால் பொருள்களை கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) அன்று ஜோகூர் அனைத்துலக மாநாடு மையத்தில் நடந்த ஹலால் திட்டங்கள் கலந்துகொண்டபோது இந்தக் கருத்தை திரு சாகித் ஹமி தெரிவித்தார்.

