கோலாலம்பூர்: ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் வர்த்தக இடையூறுகளின் தாக்கத்தை இன்னும் சமாளிக்கக்கூடிய நிலையில் மலேசியா உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகச் சங்கிலிச் சீரமைப்பு, கூடுதல் செலவுகளை நிறுவனங்களே ஏற்பது, அச்செலவுகள் உள்நாட்டு விலைகளுக்கு நேரடியாக மாற்றப்படுவதைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை போன்ற நடவடிக்கைகள் அதற்கு உதவுவதாக மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமது நசிர் தெரிவித்தார்.
வெளிப்படையான பொருளியல் அமைப்பைக் கொண்ட நாடாக மலேசியா, இந்த இடையூறுகளின் தாக்கத்திலிருந்து முற்றிலும் விலகி இருக்க முடியாது.
அரசாங்கத்தின் முன்கூட்டியே தலையிடும் நடவடிக்கைகள் மூலம் இந்நிலைமை தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருவதாக அக்மால் நஸ்ருல்லா விளக்கினார்.
“அரசாங்கம் நான்கு முக்கியப் பிரச்சினைகளின் அடிப்படையில் தலையீட்டு நடவடிக்கைகளைத் திரட்டியுள்ளது. அவற்றில் முதலாவது, மக்களின் பாதுகாப்பு ஆகும். இரண்டாவது, விநியோகத்தையும் விலைகளையும் நிலைப்படுத்துதல். இதற்கு அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தையும் விலைகளையும் தினசரி கண்காணிப்பது அவசியமாகும்,’’ என்றார் அவர்.
மக்களைப் பாதுகாக்க, நிலையான அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தை உறுதிசெய்ய, தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க, மற்றும் நாட்டின் பொருளியல் மீள்திறனை வலுப்படுத்த அரசாங்கம் உறுதியுடன் உள்ளதாக, திங்கட்கிழமையன்று (ஜூன் 22) நாடாளுமன்றத்தில் அக்மால் நஸ்ருல்லா குறிப்பிட்டதாக பெர்னாமா தெரிவித்தது.
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட வர்த்தக இடையூறுகளின் அண்மைய தாக்கம், குறிப்பாக உள்ளூர்த் தொழில்களின் செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான தேசியப் பணவீக்க விகிதம் ஆகியவை குறித்துப் பெத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரிச்சர்ட் ராபு எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
வேளாண்மை மற்றும் உணவுத் துறைகளைப் பொறுத்தவரை, மலேசியாவின் உரத் தேவைகளில் 63 விழுக்காடு, இறக்குமதியைச் சார்ந்துள்ளது என்று அக்மல் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய மதிப்பீடுகளின் அடிப்படையில், உரங்களின் விலை 15 முதல் 20 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்றும் கால்நடைத் தீவனச் செலவுகள் சுமார் 8 விழுக்காடு உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

