கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் வரும் ஆகஸ்ட்டிலிருந்து கோழி முட்டைகளுக்கான மானியத்தை முற்றிலுமாக நீக்கவுள்ளது.
இதனால் அரசாங்கத்தால் ஆண்டுக்கு 1.2 பில்லியன் ரிங்கிட்டை (S$363 மி.) மிச்சப்படுத்த முடியும். ஆனால், ஏற்கெனவே விலைவாசி உயர்வால் அவதியுறும் பயனீட்டாளர்களுக்குச் சுமை அதிகரிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தற்போது முட்டை விற்பனையாளர்கள், ஒரு முட்டைக்கு 10 மலேசிய காசு மானியம் பெறுகின்றனர். இதனால் அரசாங்கத்துக்கு மாதந்தோறும் ஏறக்குறைய 100 மில்லியன் ரிங்கிட், அல்லது ஆண்டுக்கு 1.2 பில்லியன் ரிங்கிட் செலவாகிறது.
இந்நிலையில், மானியம் கட்டங்கட்டமாக குறைக்கப்படவுள்ளது. மே 1 முதல், 50 விழுக்காடு அல்லது ஐந்து காசும் ஆகஸ்ட் 1 முதல் முற்றிலுமாகவும் மானியம் குறைக்கப்படும்.
தற்போது முட்டைகளுக்கு அரசாங்கம் விலை வரம்பு விதிக்கிறது. முட்டைகளின் வகை, தரத்தைப் பொறுத்து அவை ஒவ்வொன்றுக்கும் 38 காசு முதல் 42 காசு வரை விலை வரம்பு விதிக்கப்படுகிறது. மானியமும் விலை வரம்பும் நீக்கப்படும்போது ஒரு முட்டையின் விலை ஏறக்குறைய மூன்று காசு உயரும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
சந்தை நிலைத்தன்மையைக் கவனமாகக் கருத்தில்கொண்ட பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையே, நியாயமான விலையில் சிறப்பு முட்டை வகை கிடைக்கப்பெறும் என்று சொன்ன அமைச்சு, அதுகுறித்த மேல்விவரங்களை வழங்கவில்லை.
மலேசிய அரசாங்கம் நாட்டின் நிதி நிலவரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, முட்டைகளுக்கான மானியத்தை நீக்கும் நடவடிக்கை அமைகிறது.

