போதைப்பொருள் கடத்த மலேசிய ஆகாயப் படை வசதிகளைப் பயன்படுத்திய கும்பல்

போதைப்பொருள் கடத்த மலேசிய ஆகாயப் படை வசதிகளைப் பயன்படுத்திய கும்பல்

படம்: பெர்னாமா

26 Nov 2026 - 5:40 pm

2 mins read

கோலாலம்பூர்: அண்மைய ஆண்டுகளில் குறைந்தது 3,000 கிலோகிராம் போதைப்பொருளைச் சட்டவிரோதமாகக் கடத்துவதற்கு மலேசிய ஆகாயப் படையின் வசதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் வியாழக்கிழமை (நவம்பர் 26) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ராணுவ அதிகாரிகளின் உதவியுடன் செயல்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்த விசாரணை விரிவடைந்து வரும் நிலையில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்ற 21 பரிவர்த்தனைகளை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தைத் தளமாகக் கொண்ட இரு குற்றக் கும்பல்கள், விமானப் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட ஆகாயப் படைக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி 156 மில்லியன் ரிங்கிட் (S$49 மில்லியன்) மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

எனினும், ஆகாயப் படைத் தளங்கள் அல்லது விமானங்கள் இதில் பயன்படுத்தப்பட்டனவா என்பதை அவர் குறிப்பிடவில்லை.

“இது கடுமையான குற்றச் செயல் மட்டுமல்ல. நாட்டின் தற்காப்பு அமைப்புகளின் நேர்மையையும் இது சிதைக்கக்கூடும்,” என்று அமைச்சர் சைஃபுதீன் கூறினார்.

இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய விசாரணையைத் தொடர்ந்து, நவம்பர் 17, 19 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட இரு சோதனை நடவடிக்கைகளில், ஐந்து அதிகாரிகள் உட்பட ஏழு ஆகாயப் படை வீரர்களும் ஆறு பொதுமக்களும் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 100 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளும் மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றக் கும்பல் மீதான விசாரணையை அதிகாரிகள் விரிவுபடுத்தியுள்ளதாகவும், கும்பலின் தலைவர் அடையாளம் காணப்பட்டு விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் திரு சைஃபுதீன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்