மலேசிய ஊழல் தடுப்பு அதிகாரிகள் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்

மலேசிய ஊழல் தடுப்பு அதிகாரிகள் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்

1 mins read
5032c889-8e5c-4054-9fc3-58d4329c48c1
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் ஹலீம் அமான். - படம்: பெர்னாமா

புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் பணிபுரிபவர்கள், தங்களது சொத்து விவரங்களை, அதிகாரபூர்வ அறிவிப்புக் கிடைத்த ஒரு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும். அந்த அறிவிப்புக் கடிதம் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் ஹலீம் அமான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் கட்டிக்காக்க, தனது தலைமையின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகளில் இந்த உத்தரவும் ஒன்று என்றார் தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமான்.

“சொத்து விவரத்தை ஆணையத்திற்குத் தெரிவிக்கும் முதல் ஆளாகவும் முன்னுதாரணமாகவும் நான் இருப்பேன்,” என்று அவர் திங்கட்கிழமை புத்ரா ஜெயாவில் நடைபெற்ற ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாதாந்தரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

“பொதுமக்களின் உணர்வுகள், ஊடகங்களின் கண்காணிப்பு அல்லது அரசியல் செல்வாக்கு என எந்தத் தரப்பிலிருந்தும் வரும் அழுத்தங்களுக்கு ஊழல் தடுப்பு ஆணையம் அடிபணியாது,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

“விதிவிலக்கோ சமரசமோ இன்றிப் பின்பற்றப்படும் நீதியும் ஆட்சியும் நாங்கள் நிலைநிறுத்தும் கொள்கைகளாகும். நேர்மை என்பது வெறும் சொல்லாடல்களையும் வாக்குறுதிகளையும் கடந்து செல்ல வேண்டும். அது ரகசியமான முடிவெடுத்தல் மற்றும் அச்சமற்ற விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மேலும், எந்தவொரு தவறான செயலின் மூலமும் அமைப்பின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டாம் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் பணியாளர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்