சிபு: இந்தோனீசியாவிலிருந்து 517,000 ரிங்கிட் மதிப்புள்ள கள்ள சிகரெட்டுகளை மலேசியாவுக்குள் கடத்தி வரும் முயற்சியை ராணுவம் முறியடித்துள்ளது.
சரவாக் மாநிலத்தின் இந்தோனீசிய எல்லை அருகே செரிகின் என்ற பகுதியில் லாரி ஒன்றை மடக்கிய மலேசிய ராணுவம் அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தது.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) முற்பகல் 11.35 மணியளவில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
எல்லையைக் கடந்து, சட்டவிரோதப் பாதையில் லாரி வேகமாகச் சென்றதால் ராணுவத்துக்குச் சந்தேகம் ஏற்பட்டதாக கிழக்குத் தள ராணுவத் தளபதி லெஃப்டினென்ட் ஜெனரல் முஹம்மது சோஃபி முஹம்மது லெபி கூறினார்.
இந்தோனீசியாவின் கம்போங் செபோபோக்கிலிருந்து அனைத்துலக எல்லையை நோக்கி அந்த லாரி வந்தது. முன்னதாக, அந்த லாரி பற்றிய தகவல் கிடைத்துவிட்டதால் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று லாரியைத் தடுத்து நிறுத்தினர்.
லாரியைச் சோதனை செய்தபோது தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மொத்தம் 12,180 பெட்டிகள் நிறைய கள்ள சிகரெட்டுகள் இருந்தன. பல்வேறு நிறுவனங்களின் பெயர்களைக் கொண்டவை அந்த சிகரெட்டுகள். பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு 517,200 ரிங்கிட் என்று தெரிவிக்கப்பட்டது.
லாரியின் ஓட்டுநரான 51 வயது ஆடவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்தகட்ட விசாரணைக்காக காவல்துறையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
எல்லை அருகே கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அறிந்து அண்மைய காலமாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக திரு முஹம்மது சோஃபி கூறினார்.

