250 வனவிலங்குகளை இந்தியாவிற்குக் கடத்த முயன்ற மலேசியர் தாய்லாந்தில் கைது

250 வனவிலங்குகளை இந்தியாவிற்குக் கடத்த முயன்ற மலேசியர் தாய்லாந்தில் கைது

1 mins read
18f6517a-932f-47db-a620-2e0f14658837
பிடிபட்ட ஆடவர் பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து கோல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லவிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பேங்காக்: உயிருடன் இருந்த 250க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை இந்தியாவிற்குக் கடத்த முயன்றதாகக் கூறி, பேங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் 34 வயது மலேசியர் ஒருவரைத் தாய்லாந்து அதிகாரிகள் கைதுசெய்தனர்.

மே 24ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு அவ்விமான நிலையத்தின் எஃப்3 ஏறுவழிக்கு அருகே அந்த ஆடவர் பிடிபட்டார்.

தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புத் துறையும் சில அமலாக்க அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போது அவர் சிக்கினார்.

அவர் பேங்காக்கிலிருந்து கோல்கத்தாவிற்குச் செல்லவிருந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“அவரது பயண உடைமைகளைச் சோதனை செய்தபோது, பெட்டி ஒன்றினுள் உயிருடன் விலங்குகள் மறைத்து வைக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து உடும்புகள், 80 நன்னீர் ஆமைகள், இரண்டு இருவாய்ச்சிக் குருவிகள், 100 நீலநாக்கு அரணைகள் உள்ளிட்டவையும் அவற்றில் அடங்கும்,” என்று தாய்லாந்து அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கைதுசெய்யப்பட்ட ஆடவர் பின்னர் விமான நிலையக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். கைப்பற்றப்பட்ட விலங்குகள் வனவிலங்கு, மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த விலங்குக் கடத்தல் கும்பலுடன் வேறு எவருக்கேனும் தொடர்புள்ளதா என்பதை அறிய அதிகாரிகள் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாதாய்லாந்துவனவிலங்குகடத்தல்இந்தியாபேங்காக்விமான நிலையம்