கங்கார்: மலேசிய அதிகாரிகள் பல்வேறு வகையான ஆமைகளைக் கடத்துவதில் ஈடுபட்ட ‘நிஞ்சா ஆமை’ கும்பலைக் கைது செய்துள்ளனர்.
மேலும், இதன் தொடர்பில் பிப்ரவரி 4ஆம் தேதி அன்று 200,000 ரிங்கிட்டுக்கும் (S$64,464) அதிகமான பணத்தைப் பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்தனர்.
வனவிலங்குப் பாதுகாப்பு, தேசிய பூங்காக்கள் துறை, புக்கிட் அமானில் உள்ள உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறையின் வனவிலங்கு குற்றம்/சிறப்பு விசாரணை புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றால் நடத்தப்பட்ட கசானா ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் இந்த முறியடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெர்லிஸ் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையுடன் இணைந்து, மூன்று இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் 50 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிடைத்த தகவலின்படி, கங்காரில் உள்ள ஒரு வீட்டில் பிற்பகல் 12.35 மணியளவில் உள்ளூர்வாசி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ‘சுல்காட்டா’ ஆமைகள் என சந்தேகிக்கப்படும் ஆறு ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்காக்கள் துறையின் தலைமை இயக்குநர் அப்துல் காதிர் அபு ஹாஷிம் கூறினார்.
“சந்தேகத்துக்குரியவர் வனவிலங்குகளை வைத்திருக்க எந்தவொரு செல்லுபடியாகும் உரிமத்தையோ, ஆவணத்தையோ சமர்ப்பிக்கத் தவறிவிட்டார்,” என்று அவர் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அன்று மலேசிய நாளிதழான சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.
“சந்தேகநபரின் தகவல் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில், நடவடிக்கைக் குழு பிற்பகல் 2.05 மணியளவில் காக்கி புக்கிட்டில் உள்ள ஒரு வீட்டில் இரண்டாவது சோதனையை நடத்தியது. பின்னர் மேலும் இரண்டு உள்ளூர் ஆடவர்களைக் கைது செய்தது.
“இந்தச் சோதனையில், பல்வேறு வகையான 44 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் ‘சுல்காட்டா’ ஆமை, இந்திய நட்சத்திர ஆமை, ‘பானிங்’, ‘லீஃப்’ ஆமை, பர்மிய நட்சத்திர ஆமை, ‘கட்டூப்’, ‘பிளாக் மார்ஷ்’ ஆமை ஆகியவை அடங்கும்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வீட்டில் உள்ள கொட்டகையை மேலும் ஆய்வு செய்தபோது ஆமை முட்டைகள் என சந்தேகிக்கப்படும் 13 முட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக திரு அப்துல் காதிர் கூறினார்.
“கைப்பற்றப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு 287,395 ரிங்கிட்,” என்று அவர் கூறினார்.
முதல் சந்தேகநபர், தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ‘நிஞ்சா ஆமை’ கும்பலின் தலைவராக இருப்பார் என நம்பப்படுவதாகவும் மற்ற இரு சந்தேகநபர்களும் முதல் சந்தேகநபரால் ஆமைக் கடையைப் பாதுகாக்க பணியமர்த்தப்பட்டதாக நம்பப்படுவதாகவும் திரு அப்துல் காதிர் கூறினார்.
“அவர்கள் ஒருங்கிணைந்த முறையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆமைகள் தாய்லாந்து, வியட்னாம், இந்தியா, உள்ளூரைச் சேர்ந்த ஆமை இனங்களிலிருந்து பெறப்பட்டு, உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளில் விற்கப்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார் என்று ‘த ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.

