கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள பங்ளாதேஷ் ஊழியர்களிடையே சமூக ஊடகங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழு பற்றிய சித்தாந்தங்களைப் பரப்பியதோடு குழுவுக்காக நிதித் திரட்ட முற்பட்ட கட்டமைப்பை அதிகாரிகள் களைத்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு கோலாலம்பூரில் ஐஎஸ் குழுவுடன் தொடர்புடைய தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானோர் முஸ்லிம்களைப் பெரும்பாலும் கொண்டிருக்கும் மலேசியாவில் தடுத்துவைக்கப்பட்டனர்.
தொழிற்சாலைகள், ஆலைகள், கட்டுமானத் தளங்கள் ஆகியவற்றில் வேலைசெய்ய வெளிநாட்டு ஊழியர்களை மலேசியா அதிகம் சார்ந்திருக்கிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பங்ளாதேஷ் நாட்டவர் மலேசியாவுக்கு வேலை செய்ய செல்கின்றனர்.
ஏப்ரல் மாதத்திலிருந்து நடைபெற்ற பல சோதனை நடவடிக்கைகளில் அதிகாரிகளால் 36 பங்ளாதேஷ் நாட்டவர் தடுத்துவைக்கப்பட்டதாக காவல்துறைத் தலைவர் ஜெனரல் முகமது காலிட் இஸ்மாயில் செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார். தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் கட்டுமானம், சேவை ஆகிய துறைகளில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள்.
அந்தக் குழு, இதர பங்ளாதேஷ் ஊழியர்களைக் குறிவைத்து ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு சமூக ஊடகங்களையும் இணையத்தள செய்தி அனுப்பும் தளங்களையும் பயன்படுத்தி தீவிரவாதச் சித்தாந்தங்களைப் பரப்பியதாக காவல்துறையின் உளவுப் பிரிவு சொன்னது.
அனைத்துலக நிதிப் பரிமாற்றச் சேவைகள், மின் பணப்பைகள் ஆகியவை மூலம் சிரியா, பங்ளாதேஷ் ஆகியவற்றில் செயல்படும் ஐஎஸ் அமைப்புக்கு மலேசியாவில் இருந்த குழு நிதி திரட்டியது.
தடுத்துவைக்கப்பட்டோரில் ஐவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 15 பேர் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் 16 பேர் காவல்துறையின் தடுப்புக் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவில் செயல்பட்ட பயங்கரவாதக் குழுவில் 100லிருந்து 150 பேர் வரை இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.