ஜோகூர் பாரு: மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை இரண்டு வாரங்களில் 270 சொகுசு கார்களை நாடெங்கும் பறிமுதல் செய்துள்ளது. அந்தச் சொகுசு கார்களின் உரிமையாளர்கள் உரிய சாலை வரியையோ காப்புறுதியையோ வைத்திருக்கவில்லை.
பிடிபட்டோரில் சிலர் தொலைக்காட்சிப் பிரபலங்கள், சிலர் சமூக ஊடகப் பிரபலங்கள், வேறு சிலர் வர்த்தகத் தலைவர்கள் என்று சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் அடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார். அவர்களில் சிலர் 29,000 ரிங்கிட் ($8,840) வரையிலான சாலை வரிகளைக் கட்டவில்லை.
“பறிமுதல் செய்யப்பட்ட கார்களில் ஃபெராரி, லம்போர்கினி, ரோல்ஸ்-ராய்ஸ் ஆகியவை அடங்கும். அவற்றுள் சில கார்களின் உரிமையாளர்கள் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குச் சாலை வரியைச் செலுத்தாமல் காரை ஓட்டியுள்ளனர்,” என்ற திரு அடி ஃபட்லி, ஜோகூரில் மட்டும் 11 வாகனங்கள் பிடிபட்டதாகக் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரில் கட்டப்படாத ஆக அதிக சாலை வரியின் தொகை 29,000 ரிங்கிட் என்றார் அவர்.
சாலை வரிகள், காப்புறுதிக் கட்டணங்கள், அபராதங்கள் ஆகியவற்றை உரிமையாளர்கள் செலுத்தினால்தான் வாகனங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சொகுசுக் கார்களின் சோதனை சபா, சராவாக் ஆகிய மாநிலங்கள் வரை நீட்டிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

