கோலாலம்பூர்: குடியேறிகள் கடத்தல் கும்பல் ஒன்று மலேசியக் காவல்துறையிடம் சிக்கியது.
செராஸ், காஜாங் ஆகிய இடங்களில் உள்ள நான்கு அடுக்குமாடி வீடுகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 29 மியன்மார் நாட்டவர்கள் பிடிபட்டனர்.
அவர்களில் கடத்தல் கும்பலுக்கு முகவர்களாகச் செயல்பட்டதாக நம்பப்படும் ஐவரும் அடங்குவர்.
பல சட்டவிரோதக் குடியேறிகள் கடத்திக் கொண்டுவரப்பட்டதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, இரவு நேரத்தில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டதாக மலேசியக் குற்றவியல் புலன்விசாரணைப் பிரிவு தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட 24 சட்டவிரோத குடியேறிகளில் 22 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர்.
அவர்கள் 18 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்கள் அனைவரும் அந்த வீடுகளில் கடந்த இரண்டு வாரங்களாகத் தங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
மியன்மார் நாட்டைச் சேர்ந்த அந்த முகவர்களுக்குத் தலா 2,000 ரிங்கிட்டிலிருந்து 3,000 ரிங்கிட் வரை கொடுத்து மலேசியாவின் கிழக்குக் கடலோரப் பகுதி வாயிலாக அந்தக் குடியேறிகள் மலேசியாவுக்குள் கடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கைது செய்யப்பட்ட ஐந்து முகவர்களும் 27 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக மலேசியாவுக்குள் சட்டவிரோத குடியேறிகளைக் கடத்தும் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த ஐவரிடமும் கைது செய்யப்பட்ட 24 குடியேறிகளிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.


