பந்தயத்தில் கடைசி இடம், மக்கள் மனங்களில் முதலிடம்!

பந்தயத்தில் கடைசி இடம், மக்கள் மனங்களில் முதலிடம்!

ஒற்றைக் கால்தான் எனினும் தளரா மனவுறுதியுடன் ஓடி இலக்கை எட்டிய சிறுவன்
காணொளிப்படம்: ஃபரித் கமருதீன்/டிக்டாக்

29 Aug 2023 - 10:31 am

2 mins read

பாகாங்: பள்ளியில் நடந்த ஓட்டப் பந்தயத்தில் ஒற்றைக்காலுடன் ஓடி, கடைசி இடத்தைப் பிடித்தாலும் தனது தளரா முயற்சியால் மக்கள் மனங்களை வென்றுள்ளான் மலேசியாவைச் சேர்ந்த ஆகில் நௌஃபால் ஸகிரான் எனும் 11 வயதுச் சிறுவன்.

ஊன்றுகோல்களின் துணையுடன் ஓடி, பந்தயத்தை அவன் நிறைவுசெய்த காணொளி இதுவரை 682,000க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.

பாகாங்கின் ஜெரான்டுட்டில் சிறப்புத் தேவையுடைய பள்ளி மாணவர்களுக்கான திடல்தடப் போட்டிகளில், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஆகில் கலந்துகொண்டான்.

சக போட்டியாளர்கள் ஓடி எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்டாலும் பந்தயத்தை முடித்தே தீர்வது என்ற உறுதியுடன் ஆகில் ஓடினான். அவனுடைய ஆசிரியையும் அவனை ஊக்கப்படுத்தியவாறே, பந்தயத் திடலுக்கு வெளியேயிருந்து அவனுடன் ஓடுவதைக் காணொளி காட்டுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நோய்த்தொற்றால் தனது ஒரு காலை இழந்துவிட்டதாக ‘ஹரியான் மெட்ரோ’ மலேசிய நாளிதழிடம் ஆகில் கூறினான்.

“முதன்முறையாகப் போட்டியில் கலந்துகொண்டேன். சக போட்டியாளர்களுடன் களத்தில் நின்றது மனத்துன்பம் தருவதாக இருந்தது. ஆயினும், எனது காற்சட்டை கிட்டத்தட்ட கழன்றுவிழும் நிலையிலும், ‘என்ன நடந்தாலும் சரி, பந்தயத்தை முடித்தே தீர்வது’ என்பதில் உறுதியாய் இருந்தேன்,” என்றான் ஆகில்.

இதற்காக நான்கு நாள்கள் பயிற்சியெடுத்ததாக அவன் கூறினான்.

எல்லைக்கோட்டைத் தொட்டதும் நிம்மதி அடைந்ததாகக் குறிப்பிட்ட ஆகில், தன் ஆசிரியை தன்னைப் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாகவும் சொன்னான்.

ஆகிலை எண்ணிப் பெருமைகொள்வதாகக் கூறினார் அவனுடைய ஆசிரியை இந்தான் ஸுலைகா ஜுசோ.

View post on TikTok

ஆகிலின் காணொளியைக் கண்ட இணையவாசிகள் பலரும் அவனது விடாமுயற்சியைக் கண்டு நெகிழ்ந்துபோனதாகக் குறிப்பிட்டனர்.

“ஆகில் கொண்டாடப்பட வேண்டியவன். அவனது முயற்சி மதிக்கப்பட வேண்டும். அவனுக்கும் பரிசு கொடுங்கள்,” என்று டிக்டாக் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஓட்டப் பந்தயம்மலேசியாவிளையாட்டு