கோலாலம்பூர்: சாரா ஸகியா முகமது சியுர்கான் என்ற சிறுமிக்கு ஆறு வயதுதான் ஆகிறது.
ஆனால் இந்த வயதிலேயே அவருடைய கலைப் படைப்புகளில் ஒன்று ‘மொசைக்’ எனப்படும் சிறாருக்கான அறிவியல், கலை, புத்தாக்கத் திறன்களுக்கான அரும்பொருளகத்தில் இடம் பிடித்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.
அந்த அரும்பொருளகம் கோலாலம்பூரின் ஜாலான் துன் பேராக்கில் அமைந்துள்ளது.
மலேசியாவில் சிறாருக்கான முதல் அரும்பொருளகமாக ‘மொசைக் விளங்குகிறது. இங்கு சாரா வடித்த வண்டு ஒன்றின் படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் அவர் பயிலும் பாலர் பள்ளியின் மற்ற மாணவர்களின் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
“மொசைக் அரும்பொருளகத்தில் எனது படம் வைக்கப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதை வடிப்பதற்கு எனக்கு மூன்று மாதங்கள் பிடித்தன. மக்களுக்கு எனது வரைபடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். மொசைக்கில் மேலும் அதிகமான எனது படங்கள் இடம்பெற விரும்புகிறேன்,” என்று மொசைக் அரும்பொருளகம் கடந்த 2024ஆம் ஆண்டு திறப்பு விழா கண்டபோது கூறினார்.
இந்த மொசைக் அரும்பொருளகம் ‘திங்க் சிட்டி’ என்ற அமைப்பு, மற்ற தனியார் ஆதரவாளர்களால் மலேசிய ரிங்கிட் 600,000 (S$182,000) செலவில் உருவாக்கப்பட்டது. இது மலேசிய தலைநகரின் படைப்பாற்றல், கலாசார பெருந்திட்ட வட்டாரத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.