கோலாலம்பூர்: மலேசியக் காற்பந்துக் குழுவைச் சேர்ந்த ஏழு ஆட்டக்காரர்களுக்கு முறைப்படி மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குடியுரிமை தொடர்பான விதிமுறை மீறப்பட்டதாகக் கூறி மலேசியக் காற்பந்துச் சங்கத்துக்கும் மலேசியக் காற்பந்துக் குழுவைச் சேர்ந்த ஏழு பேருக்கும் உலகக் காற்பந்துச் சம்மேளனம் கடந்த மாதம் தடை விதித்தது. போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக சம்மேளனம் கூறியது.
இந்நிலையில், குடியுரிமை முறைப்படி வழங்கப்பட்டதாக அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் தெரிவித்ததுடன் அதுகுறித்து விளக்கமளித்தார்.
“மலேசியக் குடியுரிமை கோரி 23 காற்பந்து ஆட்டக்காரர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் சம்பந்தப்பட்ட ஏழு பேரும் அடங்குவர். அவர்கள் தாங்களாகவே முன்வந்து விண்ணப்பம் செய்தனர்.
“குடியுரிமை விண்ணப்பங்களுக்கான செயல்முறை மிகவும் எளிது. உயிரளவை முறைப்படி அவர்களது தனிப்பட்ட விவரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. பிறகு, அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதையடுத்து, அவர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டது,” என்று அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் தெரிவித்தார்.
மலேசியாவின் அரசியலமைப்புச் சட்டப்படி குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்கள் அவர்களாகவே நேரடியாக விண்ணப்பம் செய்யவேண்டும் என்றும் முகவர்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.
அதுமட்டுமல்லாது, குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மலேசியாவில் தங்கியிருக்க வேண்டும் என்றார் அவர்.
மேலும், நன்னடத்தை கொண்டவர்களாக இருப்பதுடன் மலாய் மொழியில் போதுமான அளவுக்குப் பேசக்கூடியவர்களாக இருப்பது அவசியம் என்று அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த மூன்று நிபந்தனைகளையும் சம்பந்தப்பட்ட ஏழு ஆட்டக்காரர்களும் நிறைவேற்றியதாக அவர் கூறினார்.
இனி, இந்த ஏழு ஆட்டக்காரர்கள் தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு காண்பது உலகக் காற்பந்துச் சம்மேளனம் மற்றும் மலேசியக் காற்பந்துச் சங்கத்தின் கைககளில் உள்ளதாக அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் கூறினார்.