மலேசிய மலையேறி நேப்பாளத்தில் மரணம்

1 mins read
fb6c4bc4-f054-41cb-bcc0-bbbc51e354b6
திரு ஹஸ்லாமி அகமத் நிஸாம், அண்மை மாதங்களில் நேப்பாளத்தில் உள்ள எவரெஸ்ட் அடிவார முகாமுக்கும் தைவானில் உள்ள சூஷான் மலைமீதும் ஏறியதாகக் கூறப்பட்டது.  - படம்: ஹஸ்லாமி நிஸாம்/ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: மலேசியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர், வியாழக்கிழமை நேப்பாளத்தில் உள்ள இமயமலையின் மேரா சிகரத்தில் ஏற முயன்றபோது உயிரிழந்தார்.

மலேசிய ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன.

அந்த 33 வயது மலையேற்ற வீரரின் பெயர் ஹஸ்லாமி அகமத் நிஸாம்.

வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அவருடைய மரணச் செய்தி கிடைத்ததாக நேப்பாளத்தில் உள்ள மலேசியத் தூதரகம் கூறியது.

மேலும், விரிவான அறிக்கையை நேப்பாள அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் அது தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை ஹஸ்லாமியின் உடலை ஹெலிகாப்டர் மூலம் மலையிலிருந்து கீழே கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

திரு ஹஸ்லாமியின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் அவரது உடலை மலேசியாவிற்குக் கொண்டுசெல்ல உதவுவதற்காக நேப்பாளத்திற்குச் செல்வார்கள் என்று பெரித்தா ஹரியான் நாளேடு தெரிவித்தது.

ஹஸ்லாமி திறமையான மலையேற்ற வீரர் என்றும் அண்மை மாதங்களில் நேப்பாளத்தில் உள்ள எவரெஸ்ட் அடிவார முகாமுக்கும் தைவானில் உள்ள சூஷான் மலைமீதும் அவர் ஏறினார் என்றும் கூறப்பட்டது.

அவர் பகாங்கில் உள்ள பெட்ரோனாஸ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும் அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் ஹஸ்லாமியின் நண்பர் ஒருவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பலர், ஹஸ்லாமியின் மரணத்திற்குச் சமூக ஊடகங்களில் இரங்கல் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்