ஈப்போ: உடல்நலத்திற்கும் அழகுக்கும் உகந்த பானங்கள் என்ற போர்வையில், அவற்றில் 1.2 மில்லியன் ரிங்கிட் (S$361,800) மதிப்புள்ள திரவ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற மலேசிய இணையர் பேராக்கின் ஈப்போவில் கைதுசெய்யப்பட்டனர்.
கேனிங் கார்டனில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் அந்த 30 வயது ஆடவரும் 29 வயதுப் பெண்ணும் இம்மாதம் 20ஆம் தேதி பிடிபட்டதாகப் பேராக் காவல்துறைத் தலைவர் நூர் ஹிஷாம் நோர்தின் கூறினார்.
அவர்களிடம் போதைப்பொருள் அடங்கிய ஆறு புட்டிகள் இருந்ததைக் காவல்துறை கண்டுபிடித்தது என்று திங்கட்கிழமை (மார்ச் 24) செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, செமோரில் உள்ள அவர்களது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது போதைப்பொருள் அடங்கிய மேலும் ஆறு புட்டிகளைக் கண்டுபிடித்ததாகவும் திரு நூர் ஹிஷாம் சொன்னார்.
மொத்தம் 37.331 லிட்டர் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்றும் அது 373,331 போதைப்புழங்கிகளுக்கு வழங்க போதுமானது என்றும் அவர் கூறினார்.
அந்த இணையரின் வீட்டிலிருந்து போதைப்பொருள் பொட்டலமிடும் இயந்திரத்தையும் ஒரு கைப்பேசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் அந்தப் போதைப்பொருளை உள்ளூரிலும் வெளிநாட்டிலும் விநியோகம் செய்யத் திட்டமிட்டிருந்ததாக நம்பப்படுகிறது என்று ஆணையர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
அந்த ஆடவர் ஏற்கெனவே போதைப்பொருள் சார்ந்த வழக்குகளுடன் தொடர்புடையவர் என்றும் அவரின் மனைவி ‘பென்சோடையாஸபீன்’ எனும் போதைப்பொருளை உட்கொண்டிருந்தது சோதனையில் தெரியவந்தது என்றும் திரு நூர் ஹிஸாம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“அவ்விருவரும் நீர் வடிகட்டி விற்பனையாளர்கள். கடந்த 2024 ஜூன் மாதத்திலிருந்து அவர்கள் போதைப்பொருள் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். வெளிநாட்டிலும் அவர்கள் பலமுறை போதைப்பொருள் விநியோகம் செய்துள்ளதாக நம்பப்படுகிறது,” என்றும் அவர் விவரித்தார்.
கணவன் - மனைவி இருவரும் காவலில் வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.