$8.4 மில்லியனைத் திருப்பித் தர சிங்கப்பூரருக்கு மலேசிய நீதிமன்றம் உத்தரவு

1 mins read
bec3e197-c362-4b43-adb4-ee9e383cb989
சான் செ ஷின், முதலீட்டு நடவடிக்கைகளுக்காகப் பணம் பெறுவதற்கு மலேசியப் பங்குபத்திர ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என்று கூறப்பட்டது. - கோப்புப் படம்: சாவ்பாவ்

மலேசிய முதலீட்டாளர்கள் 122 பேருக்கு ஏறக்குறைய 28 மில்லியன் ரிங்கிட் (S$8.4 மில்லியன்) பணத்தைத் திருப்பித் தரும்படி சிங்கப்பூர் ஆடவர் ஒருவருக்கு மலேசிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் இதன் தொடர்பில் 2022ஆம் ஆண்டு வழக்கு தொடுத்ததாகக் கூறப்பட்டது.

சான் செ ஷின் எனும் அந்த ஆடவர் சட்டவிரோதமாகச் செயல்பட்டார் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அரிஃப் எம்ரன் அரிஃபின் கூறியதாக ஃப்‌ரீ மலேசியா டுடே செய்தி இணையத்தளம் நவம்பர் 15ஆம் தேதி குறிப்பிட்டது.

அவர் முதலீட்டு நடவடிக்கைகளுக்காகப் பணம் பெறுவதற்கு மலேசியப் பங்குபத்திர ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என்றும் கூறப்பட்டது.

எனவே, முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தைச் சான் திருப்பித் தரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அந்தப் பணத்திற்கு ஆண்டுக்கு ஐந்து விழுக்காடு என்ற கணக்கில் வட்டித் தொகையையும் அவர் தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வட்டித்தொகை, வழக்கு தொடுக்கப்பட்ட நாளிலிருந்து தொகை திருப்பித் தரப்படும் நாள் வரை கணக்கிடப்படும்.

இதன் தொடர்பில் சான் மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ஃபுல்டா மலேசியா பர்ஹாட் எனும் நிறுவனத்தைத் தொடங்கிய சான், சாலைக்காட்சிகள், கருத்தரங்குகள் மூலம் சில முதலீட்டுத் திட்டங்களை விளம்பரப்படுத்தினார்.

2016ஆம் ஆண்டு முதல் முதலீட்டாளர்கள் பணம் செலுத்தியதாகத் தெரிகிறது.

முதலீட்டுத் திட்டத்தில் சேரும்போதே இழப்பு ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகை தரப்படுமென்று சான் உறுதிகூறியதாக முதலீட்டாளர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்