கோலாலம்பூர்: கடத்தப்பட்ட கிறிஸ்துவச் சமய மதபோதகரின் குடும்பத்துக்கு 31 மில்லியன் ரிங்கிட் (S$9.6 மில்லியன்) இழப்பீடு வழங்க வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்துக்கும் காவல்துறைக்கும் அந்நாட்டின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திரு ரேமண்ட் கோ கடத்தப்பட்டார்.
மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவின் பேரில், இந்த வழக்கில் பிரதிவாதிகளாக இருக்கும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்டதாக நீதிபதி சூ தியாங் ஜூ புதன்கிழமையன்று (நவம்பர் 5) கூறினார்.
இந்தப் பிரதிவாதிகளில் சிலர் இன்றும் காவல்துறை அதிகாரிகளாகப் பணிபுரிவதாகவும் எஞ்சியோர் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் என்றும் அவர் தெரிவித்தார்.
திரு கோ 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று கடத்தப்பட்டார். அவர் மாயமான நாளிலிருந்து கண்டுபிடிக்கப்படும்வரை திரு கோவின் குடும்பத்துக்கு நாளுக்கு 10,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, திரு கோவின் குடும்பத்துக்கு நீதிமன்றம் 4 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையையும் வழக்கு தொடர்பான செலவுகளுக்கு 250,000 ரிங்கிட் தொகையையும் வழங்கியது.
திரு கோ கடத்தப்பட்டது தொடர்பாக 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதியன்று, அவரது மனைவி திருவாட்டி சுசானா லியூ, 13 பேருக்கு எதிராக வழக்கு தொடுத்தார். வழக்கு தொடுக்கப்பட்டவர்களில் மலேசிய அரசாங்கமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஹராப்பான் கம்யூனிட்டி’ எனும் அரசாங்க சார்பற்ற அமைப்பை நிறுவிய திரு கோ, தமது நண்பரின் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது பெட்டாலிங் ஜெயாவில் ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதிரடி நடவடிக்கைகளின்போது காவல்துறை அதிகாரிகள் அணிந்துகொள்வது போன்ற சீருடைகளை அணிந்துகொண்டு குறைந்தது 15 பேர் திரு கோவைக் கடத்தியதாகக் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் காட்டுவதாக நம்பப்படுகிறது.


