ஈப்போ: மலேசியாவில் வாகனங்களைப் பழுதுபார்க்கும் ஆடவர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு 23 ஆண்டுகளாக சாலை வரி செலுத்தாமல் அதை ஓட்டியிருக்கிறார்.
அந்த 61 வயது ஆடவரை புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) அதிகாரிகள் பிடித்தனர்.
ஜாலான் சிலிபின்-ஈப்போவில் சாலைப் போக்குவரத்துப் பிரிவினர் அவரைப் பிடித்து விசாரித்தனர். அவரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த ஆடவர், 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு சாலை வரி செலுத்தவில்லை என்று பேராக் சாலைப் போக்குவரத்துப் பிரிவுத் தலைவர் முகம்மது யூசோஃப் அபுஸ்தான் தெரிவித்தார். தான் பொதுவாக குடியிருப்புப் பகுதிகளில்தான் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாகவும் முக்கிய சாலைகளில் ஓட்டுவதில்லை என்றும் பிடிபட்ட ஆடவர் கூறினார் என்று திரு முகம்மது யூசோஃப் அபுஸ்தான் புதன்கிழமையன்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ஐ மீறியதற்காக மோட்டார் சைக்கிளோட்டி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.