மலேசியத் துணைப் பிரதமர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு

மலேசியத் துணைப் பிரதமர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு

2 mins read
e348a4ed-0bbf-45b1-9d42-0a5aa540a8ea
ஸாஹித் ஹமிடி தமது அறநிறுவனத்துக்குச் சொந்தமான ஏறத்தாழ 31 மில்லியன் ரிங்கிட் (S$9 மில்லியன்) தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியத் துணைப் பிரதமர் ஸாஹித் ஹமிடி தம்மீது சுமத்தப்பட்ட 47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஊழல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது போன்ற குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.

வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், அந்த வழக்கை மேற்கொண்டு தொடரப்போவதில்லை என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

இருப்பினும், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் முடிவுசெய்தால் எதிர்காலத்தில் அதே குற்றச்சாட்டுகளுக்குத் திரு ஸாஹித் வழக்கு விசாரணையை எதிர்நோக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அம்னோ தலைவருமான ஸாஹித், யாயாசான் அகால்புடி எனும் தமது அறநிறுவனத்திற்குச் சொந்தமான ஏறத்தாழ 31 மில்லியன் ரிங்கிட் (S$9 மில்லியன்) தொடர்பில், நம்பிக்கை மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது என 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தார்.

இந்நிலையில், திரு ஸாஹித் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், குற்றச்சாட்டுகள் முழுமையாகக் கைவிடப்படவில்லை என்று நீதிபதி கூறினார். மலேசிய ஊழியர் எதிர்ப்பு ஆணையம் இன்னும் வழக்கை விசாரித்துவருவதை அவர் சுட்டினார்.

திரு ஸாஹித்தின் சட்டக் குழு முன்வைத்த ஆதாரங்கள் கிட்டத்தட்ட 200 பக்கங்கள் கொண்டவை என்றும் கூடுதல் பரிசீலனை நடத்தப்படுவதற்குக் காரணங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த திரு ஸாஹித் இறைவனுக்கும், தமது குடும்பத்துக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டதோடு, தாம் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இந்நிலையில், திரு ஸாஹித்தின் ஆதரவாளர்கள் நீதிமன்றத் தீர்ப்பைக் கொண்டாடினர்.

ஜோகூரில் இரண்டு இடைத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், அண்மைய தீர்ப்பு வெளியாகியுள்ளது. அந்த இடைத்தேர்தல்களில் அம்னோ போட்டியிடுகிறது.

குறிப்புச் சொற்கள்