ஹாங்காங்: ஹாங்காங் காவல்துறையினர் அறைகலன்களில் மறைத்துக் கடத்தப்பட்ட போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் தொடர்பில் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயது மலேசியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு 210 மில்லியன் ஹாங்காங் டாலர் (ஏறத்தாழ 35 மில்லியன் வெள்ளி) எனக் கூறப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 335 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் 55 கிலோகிராம் ‘கொக்கைன்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
அவை அமெரிக்காவிலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) ஹாங்காங் சென்றடைந்த கொள்கலனில் கண்டுபிடிக்கப்பட்டன.
வியாழக்கிழமை அந்தக் கொள்கலனில் உள்ள பொருள்களை ஒரு கிடங்கிற்கு மாற்ற மலேசியப் போதைப்பொருள் கடத்தல் கும்பல் திட்டமிட்டிருந்ததாக ஹாங்காங் காவல்துறை கூறியது.
கிடங்கில் சோதனை நடத்திய காவல்துறையினர், அங்கு பெட்டிகளிலிருந்து பொருள்களைப் பிரித்து எடுத்துக்கொண்டிருந்த 26 வயது மலேசியரைக் கைதுசெய்தனர்.
கடத்தலைத் திட்டமிடும் நோக்கில் அவர் ஓராண்டுக்குமுன் ஹாங்காங்கிற்குச் சுற்றுப்பயணியாக வந்தவர் என்று காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
திங்கட்கிழமை அவர், அபாயகரமான போதைப்பொருளைக் கடத்தியாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலான நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார்.
ஹாங்காங்கில் அபாயகரமான போதைப்பொருளைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 மில்லியன் ஹாங்காங் டாலர் அபராதமும் ஆயுள்தண்டனையும் விதிக்கப்படலாம்.

