மலேசிய மின் பணப்பை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 வேலை நாள்களுக்குள் இழப்பீடு வழங்க உத்தரவு

மலேசிய மின் பணப்பை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 வேலை நாள்களுக்குள் இழப்பீடு வழங்க உத்தரவு

2 mins read
4bb38dcc-3474-4a6d-8078-5e482a0e6789
கோலாலம்பூரில் உள்ள பேங்க் நெகாரா மலேசியா. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா முன்தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தவறினால், மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மின் பணப்பை நிறுவனங்கள் ஏழு வேலை நாள்களுக்குள் முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

பயனர்களின் அலட்சியத்தால் ஓரளவு இழப்பு ஏற்பட்ட சம்பவங்களுக்கும் அது பொருந்தும் என்று நிதி அமைச்சருமான திரு அன்வார் கூறினார்.

“மத்திய வங்கி, சம்பந்தப்பட்ட பிற அமைப்புகள், தனியார் துறை ஆகியவற்றுடன் இணைந்து, பல்வேறு தளங்கள் வாயிலாகத் தொடர்ந்து பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது,” என்று அவர் நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்தார்.

“நிதி மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

“ஒட்டுமொத்தமாக, இந்த நடவடிக்கைகள் பயனீட்டாளர் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், கட்டணச் சேவை வழங்குநர்களிடையே பொறுப்புணர்வை மேம்படுத்துவதிலும், மலேசியாவில் மின் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதிலும் அரசாங்கத்திற்கும் மத்திய வங்கிக்கும் உள்ள கடப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன,” என்றார் அவர்.

நாட்டின் மின் பொருளியல் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேம்படுத்த, மின் பணப்பை பரிவர்த்தனைகள், இணையக் கட்டண முறைகள் ஆகியவை தொடர்பான மோசடிகளால் பாதிக்கப்படுவோருக்கான பாதுகாப்பையும் இழப்பீட்டு வழிமுறைகளையும் வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராய் அங்காவ் ஜிங்கோய் கேட்டிருந்தார்.

நாட்டின் மின் பொருளியலின் அதிவேக வளர்ச்சிக்கு ஏற்ப, இணைய வங்கிப் பரிவர்த்தனைகள், மின் பணப்பை கட்டணங்கள் உள்ளிட்ட மின் கட்டண முறையில், பயனீட்டாளர் பாதுகாப்புக் கட்டமைப்பை மத்திய வங்கி மூலம், அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வலுப்படுத்தி வருவதாகத் திரு அன்வார் பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்