கோலாலம்பூர்: இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி மேம்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உலக நாடுகள் மீது கூடுதல் வரி விதித்திருந்தார். அதையும் தாண்டி மலேசியப் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை விஞ்சியது.
எல்லாத் துறைகளிலும் ஏற்றுமதிகளிலும் மலேசியப் பொருளியல் நல்ல வளர்ச்சி கண்டது.
இவ்வாண்டு ஜுலை, செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மலேசியாவின் பொருளியல் ஆண்டு அடிப்படையில் 5.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. மலேசியப் புள்ளிவிவரப் பிரிவு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) இத்தகவலை வெளியிட்டது.
மலேசியப் பொருளியல் தொடர்பில் முன்னதாக வெளியிடப்பட்ட கணிப்புகளில் புளூம்பர்ச் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வுக் கணிப்புதான் ஆக அதிக நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருந்தது. இப்போது வெளியிடப்பட்டுள்ள வளர்ச்சி விகிதம் அதையும் விஞ்சிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய மூன்று காலாண்டுகளில் இருந்ததையும்விட இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் மலேசியப் பொருளியல் கூடுதல் வளர்ச்சி கண்டது. வர்த்தகக் கொள்கைகள் நிலையற்றிருந்தாலும் முதலீடுகள் தொடர்ந்து இருந்து வருவது, வெளிநாடுகளில் மலேசியப் பொருள்களுக்கு இருந்துவரும் தேவை ஆகியவை பொருளியல் வளர்ச்சி மேம்பட்டதற்கு முக்கியக் காரணம் என்று அந்நாட்டின் தலைமை புள்ளிவிவர அதிகாரி முகம்மது உஸிர் மஹிதின் அறிக்கையில் தெரிவித்தார்.
உலக நாடுகள் மீது திரு டிரம்ப் கூடுதல் வரி விதித்திருப்பது இதுவரை தென்கிழக்காசிய நாடுகளின் பொருளியல்களை அதிகம் பாதிக்கவில்லை. திரு டிரம்ப், ஆக அதிக வரி விதித்துள்ள நாடுகளில் தென்கிழக்காசிய நாடுகளும் அடங்கும்.
வியட்னாமின் பொருளியல் 8.23 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாட்டுப் பொருளியல் இவ்வளவு அதிக வளர்ச்சி கண்டதில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க வரிதிப்பு நடப்புக்கு வருவதற்கு முன்பு அமெரிக்காவுக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் வியட்னாமிய ஆலைகள் தீவிரமாக ஈடுபட்டது அதற்கு முக்கியக் காரணம்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்து 2.9 விழுக்காடாகப் பதிவாகியிருந்தாலும் அது கவனிப்பாளர்களின் கணிப்புகளை விஞ்சியது. பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, இந்தோனீசியா ஆகிய நாடுகள் மூன்றாம் காலாண்டுக்கான பொருளியல் புள்ளிவிவரங்களை வரும் நவம்பர் மாதம் வெளியிடவுள்ளன.