கணிப்பை விஞ்சியது மலேசியப் பொருளியல் வளர்ச்சி

கணிப்பை விஞ்சியது மலேசியப் பொருளியல் வளர்ச்சி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Oct 2026 - 7:28 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் பொருளியல் வளர்ச்சியின் வேகம் சற்றுத் தணிந்திருந்தாலும் அது கணிப்புகளை விஞ்சி அசத்தியுள்ளது.

அதற்கு முக்கியக் காரணமாக செயற்கை நுண்ணறிவுத் துறையின் துறையின் வளர்ச்சியும் ஏற்றுமதியும் திகழ்கின்றன. மேலும், உள்நாட்டுத் தேவையும் வலுவாக உள்ளது.

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.3 விழுக்காடாக உயர்ந்தது. அது முந்தைய ஆண்டை விட அதிகரித்துள்ளது.

மலேசியப் புள்ளிவிவரத் துறை அக்டோபர் மாதம் வெளியிட்ட முதற்கட்ட மதிப்பீடுகள் அதனைத் தெரிவிக்கின்றன.

புளூம்பெர்க் நிறுவனம் கணித்திருந்த நடுத்தர 5.1 விழுக்காட்டைவிட அது அதிகமாகும்.

பெரும்பாலான பொருளியல் துறைகளில் காணப்பட்ட ஆக்ககரமான செயல்பாடுகளே வளர்ச்சிக்கு உதவியாக அமைந்தன என்று புள்ளிவிவரத்துறை அறிக்கையில் குறிப்பிட்டது.

சுரங்கம் மற்றும் பாறை அகழ்வுத் துறைகள் மட்டுமே சுருக்கத்தைக் கண்டன.

மலேசியாவின் சிறப்பான பொருளியல் மீள்திறனை அந்தத் தரவுகள் காட்டுகின்றன. வலுவான உள்நாட்டுப் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவுக்கான மின்னணுப் பொருள்களின் தேவை ஆகியவை முக்கியக் காரணங்களாகும். அவை ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தணிக்க உதவியுள்ளன.

“பொருளியல் முடிவுகள் தங்களின் கணிப்புகளுக்கு ஏற்பவே அமைந்துள்ளன,” என்று ஓவர்சீ-சைனீஸ் பேங்கிங் கார்ப்பரேஷனின் பொருளியல் நிபுணர் லாவண்யா வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

முதல் அரையாண்டின் வலுவான வளர்ச்சியில் இருந்து சற்று மிதமான போக்கைக் காட்டினாலும், வளர்ச்சி இன்னும் வலுவாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மலேசிய மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை உயர்த்த இது வழிவகுக்கலாம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவுகளுக்குப் பிறகு மலேசிய ரிங்கிட் டாலருக்கு எதிராக நிலையாக இருந்தது. ஆனால், உள்ளூர் பங்குகள் சரிவைக் கண்டன.

சேவைத் துறை உயர்ந்தது. மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், தகவல் தொடர்பு, நிதித்துறை ஆகியவை இதற்கு உதவின. உற்பத்தித் துறையும் வலுவடைந்தது.

அக்டோபர் மாதத் தொடக்கத்தில், பிரதமர் அன்வார் இப்ராகிம் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்க சில அறிவிப்புகளை வெளியிட்டார். அடுத்த ஆண்டிற்கான கூடுதல் ரொக்க உதவி மற்றும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஆகியவற்றை அவர் அறிவித்தார். தொடர்ச்சியான உள்நாட்டுத் தேவை மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் பொருளியல் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபொருளியல்ரிங்கிட்