கோலாலம்பூர்: மலேசியப் பொருளியல் இவ்வாண்டின் (2026) முதல் காலாண்டில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மெதுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
உற்பத்தி, சேவை உள்ளிட்ட நாட்டின் முக்கியத் துறைகளை மத்திய கிழக்குப் போர் பாதிக்கத் தொடங்கியிருப்பதன் அறிகுறி அது எனக் கருதப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு ஜனவரியிலிருந்து மார்ச்வரை 5.3 விழுக்காடு உயர்ந்துள்ளது. மலேசியாவின் புள்ளிவிவரத் துறை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்ட முன்னோடி மதிப்பீட்டு அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
புளூம்பெர்க் கருத்தாய்வில், மலேசியப் பொருளியலின் இடைநிலை வளர்ச்சி 5.5 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டில் வளர்ச்சி 6.3 விழுக்காடாக இருந்தது.
ஈரானியப் போரால் ஏற்படக்கூடிய பொருளியல் பாதிப்பைக் கணக்கிடும் அளவுகோலாக அண்மைய புள்ளிவிவரங்கள் பார்க்கப்படுகின்றன. ஈரான் போர் தொடங்கி ஏறக்குறைய ஏழு வாரமாகிவிட்டது. சிங்கப்பூர், அதன் பொருளியல் வளர்ச்சி இவ்வாண்டின் முதல் காலாண்டில் கணிசமாய்க் குறைந்துள்ளதாகத் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) தெரிவித்திருந்தது. வரும் மாதங்களில் ஈரானியப் போரால் பொருளியல் நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அது எச்சரித்திருந்தது.
இருப்பினும் மலேசியாவின் முதல் காலாண்டு வளர்ச்சி, ஆண்டு முழுமைக்குமான அரசாங்கத்தின் முன்னுரைப்பைவிட அதிகமே. மலேசியா, ஆண்டு முழுமைக்குமான பொருளியல் வளர்ச்சி நான்கு விழுக்காட்டிலிருந்து 4.5 விழுக்காடுவரை இருக்கும் என்று ஏற்கெனவே மதிப்பிட்டிருந்தது.

