2025ல் மலேசியப் பொருளியல் 5.2% வளர்ச்சி கண்டது: அன்வார்

2025ல் மலேசியப் பொருளியல் 5.2% வளர்ச்சி கண்டது: அன்வார்

2 mins read
ஐந்து ஆண்டுகளில் ஆகக் குறைவான பணவீக்க விகிதம் பதிவானதைச் சுட்டினார்
24cefc72-ac3d-430f-ab87-83f484c96e40
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், சென்ற ஆண்டு பணவீக்க விகிதம் 1.4 விழுக்காடாகப் பதிவானதாகக் கூறினார். - படம்: பெர்னாமா/ஃபேஸ்புக் அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர்: மலேசியாவின் சிறப்பான பொருளியல் செயல்பாடுகள், அரசாங்கத்தின் கொள்கைகள் சரியான பாதையில் செல்வதைப் பிரதிபலிக்கின்றன என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) வெளியிடப்பட்ட 2025க்கான மலேசிய மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் இதைக் காணமுடிவதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் வலுவான, மீள்திறன் கொண்ட பொருளியல் அடிப்படைகளையும், சிறந்த நிர்வாகத்தையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

“மலேசியப் பொருளியல் சென்ற ஆண்டு (2025) 5.2 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மீள்திறன் மிக்க உள்நாட்டுத் தேவை அதற்குக் காரணம்,” என்று திரு அன்வார் தமது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

அத்துடன், பணவீக்க விகிதம் 1.4 விழுக்காடாகப் பதிவானது என்று கூறிய அவர், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆகக் குறைந்த அளவு என்பதைச் சுட்டியுள்ளார்.

“2026ஆம் ஆண்டிற்கான பொருளியல் வளர்ச்சி 4 முதல் 5 விழுக்காடாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்தப் பணவீக்கம் மிதமான நிலையில், அதாவது 1.5 முதல் 2.5 விழுக்காட்டிற்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் திரு அன்வார்.

மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் பொருள்களின் விலையிலும் விநியோகச் சங்கிலியிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், இத்தகைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள மலேசியா தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

“இறையருளால், மீள்திறன் மிக்க நிதிக் கட்டமைப்புடன் பொருளியல் வளர்ச்சிக்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் இடையிலான சமநிலையைத் தொடர்ந்து பேணுவோம்,” என்று மலேசியப் பிரதமர் உறுதியளித்ததாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்