மலேசியப் பொருளியல் இரண்டாம் காலாண்டில் 6% வளர்ச்சி

மலேசியப் பொருளியல் இரண்டாம் காலாண்டில் 6% வளர்ச்சி

2 mins read
88d81c0e-9018-4589-a981-528315ad9bdf
வேளாண் துறையைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட சிறப்பான செயல்பாட்டால் இரண்டாம் காலாண்டு வளர்ச்சி ஏற்பட்டது என மலேசிய மத்திய வங்கி தெரிவித்தது. - படம்: புளூம்பர்க்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட அபாயங்களை, வலுவான ஏற்றுமதி வளர்ச்சி, நிலையான குடும்பச் செலவினங்கள் ஈடுசெய்ததால், மலேசியாவின் பொருளியல் கடந்த ஆண்டை விட இரண்டாம் காலாண்டில் 6 விழுக்காடு வளர்ச்சி அடைந்து, எதிர்பார்ப்புகளை விஞ்சியுள்ளது என அரசாங்கம் மற்றும் மத்திய வங்கியின் தரவுகள் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 14) காட்டியுள்ளன.

இந்த வளர்ச்சி, 5.8 விழுக்காடு என்ற அதிகாரபூர்வ முன்னைய மதிப்பீட்டை விடவும், ராய்ட்டர்ஸ் பொருளியல் நிபுணர்களின் கருத்துக் கணிப்பில் கிடைத்த சராசரி கணிப்பை விட அதிகமாகவும், முதல் காலாண்டின் 5.4 விழுக்காடு வளர்ச்சியை விட வலுவாகவும் இருந்தது.

வேளாண் துறையைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட சிறப்பான செயல்பாட்டால் இரண்டாம் காலாண்டு வளர்ச்சி ஏற்பட்டது என, மலேசியப் புள்ளிவிவரத் துறை, பேங்க் நெகாரா மலேசியா வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

2026ஆம் ஆண்டில் வளர்ச்சி சுமார் ஐந்து விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மத்திய வங்கியின் 4 முதல் 5 விழுக்காடு விரிவாக்கக் கணிப்பின் உயர் வரம்பு என்றும் மத்திய வங்கி ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர் கூறினார். ஒப்புநோக்க, கடந்த ஆண்டு பொருளியல் 5.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

“வர்த்தகத் தேவை வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு குடும்பச் செலவினங்களும் முதலீட்டு நடவடிக்கைகளுமே காரணமாக அமைகின்றன,” என்று அவர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மிதமான பணவீக்கத்திற்கு மத்தியில், கடந்த மாதம் நடைபெற்ற ஆறாவது தொடர்ச்சியான கொள்கைக் கூட்டத்திலும் மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை மாற்றமின்றி வைத்திருந்தது.

“எரிபொருள் மானியங்கள், பிற அரசாங்க உதவிகள் காரணமாக இந்த ஆண்டு பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், உயர்ந்த உலகளாவிய பண்டங்களின் விலைகள், விலைகள் மீது மேல்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தும்,” என்றும் அப்துல் ரஷீத் மேலும் விவரித்தார்.

“தொடர்ச்சியான விலை நிலைத்தன்மை, நீடித்த பொருளியல் வளர்ச்சி குறித்த கண்ணோட்டத்திற்கு ஏற்ப, மத்திய வங்கி தனது பணவியல் கொள்கை நிலைப்பாட்டைப் பொருத்தமானதாகவும் இணக்கமானதாகவும் கருதுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மத்திய வங்கிபணவீக்கம்பொருளியல்வளர்ச்சி