கோலாலம்பூர்: மலேசியப் பொருளியல் எதிர்பார்ப்பை மிஞ்சி, 2026ன் இரண்டாவது காலாண்டில் 5.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.
மலேசியப் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின்படி, இந்த வளர்ச்சி புளூம்பெர்க் ஆய்வில் கணிக்கப்பட்ட 5.2 விழுக்காட்டை விட கணிசமாக அதிகம்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான 5.4 விழுக்காடு வளர்ச்சியைத் தொடர்ந்து தற்போது பொருளியல் 0.4 விழுக்காடு உயர்ந்து வலுவடைந்துள்ளது.
உள்நாட்டுத் தேவையின் அதிகரிப்பும் குறைகடத்தி ஏற்றுமதி அதிகரிப்பும் 2026ல் தென்கிழக்கு ஆசியாவில் விரைந்து வளர்ச்சி காணும் நாடுகளில் ஒன்றாக மலேசியா தொடரும் என்பதை மறு உறுதிப்படுத்தியுள்ளன. குறைகடத்திகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகளின் அசுர வளர்ச்சி ஆகியவை உலகளாவிய பொருளியல் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள மலேசியாவிற்கு பெரிதும் உதவியுள்ளன.
இக்காலாண்டின் பொருளியல் வளர்ச்சியின் உந்துசக்தியாக சேவைத்துறை விளங்கியது. சுரங்கத் துறை 10.2 விழுக்காடும் கட்டுமானத் துறை 6.6 விழுக்காடும் வளர்ச்சியடைந்துள்ளதாக அறிக்கை சுட்டியது.
ஜூன் மாதத்தில் பணவீக்கம் 1.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
மலேசியாவின் இந்த வலுவான பொருளியல் மீட்சி, தென்கிழக்கு ஆசியாவின் மிக வேகமாக வளரும் பொருளியல்களில் ஒன்றாக அதை நிலைநிறுத்தியுள்ளது. அத்துடன், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பையும் பொருளியல் வல்லுநர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட அமெரிக்க-ஈரான் மோதலால் உற்பத்தி, விநியோகக் கட்டமைப்பில் சவால்கள் எழுந்தபோதிலும் அரசாங்கத்தின் முயற்சிகள் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று சைபர்ஜெயாவில் நடைபெற்ற தொழில்முனைவர் கூட்டத்தில் பேசிய மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமது நாசிர் கூறினார்.
பெட்ரோனாஸ் நிறுவனம் மாற்று வளங்கள் மூலம் நீண்ட காலப் பெட்ரோலிய விநியோகத்தை உறுதி செய்துள்ளதால், ஆண்டின் இறுதிவரை நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

