நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை ஊக்குவிக்கக் கையெழுத்து இயக்கம் தொடங்கிய மலேசிய ஆர்வலர்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை ஊக்குவிக்கக் கையெழுத்து இயக்கம் தொடங்கிய மலேசிய ஆர்வலர்

1 mins read
582e182b-8a1e-4746-8b9a-53f394ba5fbb
ஏப்ரல் 18ஆம் தேதி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை மேம்படுத்தக் கோரும் மனுவிற்கு ஆதரவு திரட்டும் ஆர்வலர் ரோஷினி மூக்கையா (நடுவில், நீல நிற ஆடையில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் நாடாளுமன்றத்திற்கு வராமல் தவிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமூக ஆர்வலரான ரோஷினி மூக்கையா போர்க் கொடி தூக்கியுள்ளார்.

அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இருந்தும், பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்டத்திருத்த மசோதா மார்ச் 2ஆம் தேதி நிறைவேற்றப்படவில்லை.

மசோதாவை நிறைவேற்ற 148 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், இரு வாக்குகள் குறைவாக இருந்ததால் வாக்கெடுப்பு தோல்வியைத் தழுவியது.

அன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு 32 உறுப்பினர்கள் வராதது முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் சிலர் வராமல் இருப்பது மலேசியர்களுக்கு நீண்டகாலமாகவே ஒரு பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

அவர்களின் குறையைப் போக்க 32 வயது ரோஷினி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை மேம்படுத்தும்படி கட்டாயப்படுத்தக் கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். நண்பர்கள் சிலரின் உதவியுடன் மலேசியர்களிடமிருந்து 500 கையெழுத்துகளைச் சேகரித்து, நாடாளுமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியை நாடவும் அவர் முடிவுசெய்துள்ளார். “எங்களிடம் நிதி கிடையாது. பதாகைகள் செய்யவும் கையெழுத்துகளைச் சேகரிப்பதற்கான தாள்களை அச்சிடவும் எங்கள் சொந்தப் பணத்தில் சில நூறு ரிங்கிட்களைச் செலவிட்டோம்,” என அவர் ஏப்ரல் 18ஆம் தேதி கோலாலம்பூர் மையப்பகுதியில் உள்ள மெர்டேகா சதுக்கத்திற்கு முன்னால் வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் நின்றபடி கூறினார்.

குறிப்புச் சொற்கள்