பெட்டாலிங் ஜெயா: மங்கோலிய அழகி அல்டாண்டுயா ஷாரிபு கொலையின் தொடர்பில் அமைதியாக இருக்க, பெயர் வெளியிடப்படாத நபர்களிடமிருந்து ஒரு மில்லியன் ரிங்கிட் பெற்றதாக மலேசியாவின் முன்னாள் காவல்துறை அதிகாரி சிருல் அஸார் உமர் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டபோது அந்தப் பணத்தைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
அரசியல் தொடர்புடைய முக்கிய வழக்கறிஞர் ஒருவரும் அமைச்சரவையின் முன்னணித் தலைவரும் பண வழங்கீட்டில் சம்பந்தப்பட்டதாக அவர் சொன்னார்.
அல் ஜஸீராவின் நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் அவர் பேசினார். அரசியல் ஆட்டத்தில் தாம் பலியாடாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
அல்டாண்டுயாவின் கொலை வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளபோதும், அவரின் கொலைக்குத் தாம் பொறுப்பல்ல என்று சிருல் கூறினார்.
“அல்டாண்டுயாவைக் கொலைசெய்வதற்கான உத்தரவை யார் கொடுத்தது என்று என் நாட்டு மக்கள் பல்லாண்டுகளாகத் தெரிந்துகொள்ள காத்திருக்கின்றனர். ஆனால் என்னால் அதனைத் தெரிவிக்க முடியாது,” என்றார் அவர்.
இருப்பினும், அல்டாண்டுயாவைக் கொலைசெய்ய உத்தரவிட்டவர், ஒரு முன்னணி அரசியல்வாதி என்று அவர் கூறினார்.
“மலேசியாவுக்குத் திரும்பினால் எனக்கு ஆபத்து என்று நினைக்கிறேன். நான் இங்கு, ஆஸ்திரேலியாவில் என்னுடைய பிள்ளையுடன் வாழ விரும்புகிறேன்,” என்று சிருல் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவின் ஷா ஆலமில் 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அல்டாண்டுயா கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவரது உடல் வெடிகுண்டால் தகர்க்கப்பட்டது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் இரு மெய்க்காப்பாளர்களான சிருலும், அஸிலா ஹட்ரியும் 2009ஆம் ஆண்டில் அந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர்.
2013ஆம் ஆண்டில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை மாற்றி, அவர்களின் விடுதலைக்கு உத்தரவிட்டது.
அரசுத் தரப்பு மேல்முறையீட்டின்போது சிருல் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றார். 2015ஆம் ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியக் குடிநுழைவு அதிகாரிகள் சிருலைக் கைதுசெய்து தடுத்துவைத்தனர்.
“எனக்கு ஆஸ்திரேலியா மிகவும் பிடிக்கும். எனக்கு இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்து எங்களை ஏற்றுக்கொள்ளுமாறு நான் இங்குள்ள சமூகத்தினரைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று சிருல் கூறினார்.