பெட்டாலிங் ஜெயா: ஈரான்-அமெரிக்க ராணுவ மோதல் காரணமாக எழுந்துள்ள சூழ்நிலையைச் சமாளிக்கும் நோக்கில், மலேசியர்கள் ரோன்95 (RON95) பெட்ரோல் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் யோசனைகளில் கவனம் தேவை என பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்தகைய கட்டுப்பாடுகள், பீதியில் அதிகமாக வாங்கத் தூண்டுவதோடு விநியோகத்தில் சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும் என்பது அவர்களின் கருத்து.
உலகளவில் பதற்றங்களும் ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகளும் உலக எண்ணெய்ச் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் மலேசியாவில் உடனடியாக பெட்ரோல் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை.
இருப்பினும் பெட்ரோல் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான பல்வேறு மாற்றுத் தெரிவுகளை அரசாங்கம் அடையாளம் காணவேண்டும் என ‘பேங்க் முவாமலாட் மலேசியா’வின் தலைமைப் பொருளியல் நிபுணர் முகம்மது அப்ஸானிஸம் அப்துல் ரஷித் கூறியுள்ளார்.
சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத் தயாரிப்புகளுக்கு மலேசியா இறக்குமதிகளையே சார்ந்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உதாரணமாக, மத்திய கிழக்கிலிருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத் தயாரிப்புகளில் 13.5 விழுக்காடு கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டது.
“அவற்றில் பெரும்பகுதி சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டன. அந்த நாடுகள் கணிசமான அளவில் மத்திய கிழக்கிலிருந்து பெட்ரோலிய தயாரிப்புகளை இறக்குமதி செய்கின்றன.
“மத்திய கிழக்கில் ஏற்படும் எண்ணெய் விநியோக இடையூறுகள் எந்த அளவுக்கு மறைமுகமாகப் பாதிக்கும் என்பதை இது உணர்த்துகிறது,” என்றார் டாக்டர் அப்ஸானிஸம்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கத் தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கில் இருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக, எண்ணெய் விலைகள் தாறுமாறாக ஏறி, உலகச் சந்தைகளில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
உலகத்தின் எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. தாக்குதல் நீடித்தால், ஒரு சொட்டு எண்ணெய்கூட அந்த நீரிணையைக் கடக்க அனுமதிக்க மாட்டோம் என ஈரானைச் சேர்ந்த இஸ்லாமியப் புரட்சிகரப் படை இவ்வாரத் தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மலேசியாவில் அறிமுகம் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கையும் அதிகக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கக்கூடாது என்றும் மோசமான நிலை ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர் அப்ஸானிஸம் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய்யை மலேசியாவும் தயாரிக்கிறது என்பதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இவ்வளவுதான் வாங்க வேண்டும் என்பது போன்ற எரிபொருள் கொள்முதல் மீதான வரம்புகளை அறிமுகம் செய்வதற்கு எதிராக, சந்தைக் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாகி கார்மெலோ ஃபெர்லிட்டோ என்பவரும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

