கோலாலம்பூர்: இவ்வாண்டு மே மாதத்தில் மலேசியாவின் மொத்த வணிகம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 29.8 விழுக்காடு வளர்ச்சியடைந்து 327.63 பில்லியன் ரிங்கிட்டாக (S$102.63 பில்லியன்) உயர்ந்துள்ளது.
இது கடந்த 44 மாதங்களில் பதிவான மிக வேகமான வளர்ச்சியாகும். அத்துடன், நாட்டின் ஏற்றுமதியும் வணிக உபரியும் புதிய மாதாந்தர உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளன.
நாட்டின் ஏற்றுமதி 45.3 விழுக்காடு அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத அளவாக 184 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாக மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆகஸ்ட்டிற்குப் பிறகு பதிவான அதிவேக ஏற்றுமதி வளர்ச்சி இது.
முன்னதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வில், 2026 மே மாதத்தில் மலேசிய ஏற்றுமதி 30.5 விழுக்காடு வளர்ச்சி காணும் என எதிர்பார்ப்பதாக பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்திருந்தனர்.
அதே வேளையில், இறக்குமதியும் 14.1 விழுக்காடு உயர்ந்து 143.62 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகியுள்ளது.
இறக்குமதியைவிட ஏற்றுமதி மிகவும் அதிகரித்ததால், வணிக உபரி மாதாந்தர உச்சமாக 40.38 பில்லியன் ரிங்கிட்டாக விரிவடைந்துள்ளது. இதன்மூலம், கடந்த 2020 மே மாதத்திலிருந்து தொடர்ந்து 73வது மாதமாக மலேசியா வணிக உபரியைத் தக்கவைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் வாகனத் தொழில்நுட்பங்களுக்கு உலகளவில் அதிகத் தேவை நிலவுவதால் மின்சார, மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதுபோல, பெட்ரோலியப் பொருள்கள், திரவ இயற்கை எரிவாயு, அறிவியல் கருவிகள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரிப்பும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.
ஆசியான் நாடுகள், சீனா, அமெரிக்கா, தைவான், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மலேசியாவின் முக்கிய வணிகப் பங்காளி வட்டாரங்களுக்கு ஏற்றுமதியால் இரட்டை இலக்க வளர்ச்சி பதிவானது.
குறிப்பாக, மே மாதத்தில் தைவானுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமான ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டியது.
சென்ற ஆண்டின் ஜனவரி-மே காலகட்டத்தைவிட, இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மலேசியாவின் மொத்த வணிகம் 18.3 விழுக்காடு கூடி, 1.455 டிரில்லியன் ரிங்கிட்டை எட்டியது.
2026 ஜனவரி-மே மாதங்களில் வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி, வணிக உபரி ஆகிய அனைத்தும் சாதனை அளவை எட்டியதாக அமைச்சு குறிப்பிட்டது.
இதனையடுத்து, உலகின் நிலையற்ற பொருளியல் சூழலிலும் மலேசியாவின் வணிகம் மீள்திறனுடன் விளங்குவதாக அமைச்சு தெரிவித்தது.

