செலவுகளைக் குறைத்துக்கொள்ளும்படி மலேசிய அமைச்சுகளுக்கு அறிவுறுத்து

ஈரான் போர் எதிரொலி

செலவுகளைக் குறைத்துக்கொள்ளும்படி மலேசிய அமைச்சுகளுக்கு அறிவுறுத்து

1 mins read
4378731f-772a-48ef-b8d5-afa8eebcd063
செலவுக் குறைப்புமூலம் 10 பில்லியன் ரிங்கிட் மிச்சப்படுத்தலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

கோலாலம்பூர்: இவ்வாண்டுக்கான செலவுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு மலேசியாவின் நிதி அமைச்சு, அந்நாட்டின் எல்லா அமைச்சுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு அதிகாரி ஒருவரிடமிருந்தும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பார்த்த ஆவணங்களின் மூலமாகவும் இத்தகவல் தெரியவந்துள்ளது.

குறைக்கப்படக்கூடிய தொகை

செலவுக் குறைப்புமூலம் 10 பில்லியன் ரிங்கிட் மிச்சப்படுத்தலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தொகையில் சுகாதார அமைச்சு மிச்சப்படுத்தக்கூடிய 3.06 பில்லியன் ரிங்கிட்டும் உயர்க் கல்வி அமைச்சு மிச்சப்படுத்தக்கூடிய 2.39 பில்லியன் ரிங்கிட்டும் அடங்கும் என ஃபிரீ மலேசிய டுடே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கள் அமைச்சில் 664 மில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்த முடியும் என்று நிதி அமைச்சு தெரிவித்தது. மேலும், உள்துறை அமைச்சு 647 மில்லியன் ரிங்கிட்டையும் தற்காப்பு அமைச்சு 508 ரிங்கிட்டையும் மிச்சப்படுத்த முடியும் என்றும் நிதி அமைச்சு குறிப்பிட்டது.

ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைச் சமாளிக்க குடிமக்களுக்கு உதவ மலேசியா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்கேதுவாக அமைச்சுகளுக்கான செலவுக் குறைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற செலவுகளுக்கு மட்டுமே கட்டுப்பாடு

இந்நிலையில், செலவுக் குறைப்பு அத்தியாவசியமற்ற செலவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று நிதி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

“அத்தியாவசியச் சேவைகள், பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி உள்ளிட்ட அடிப்படை அம்சங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை, 2026 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதற்கு ஏற்பவே இருக்கும்,” என்று நிதி அமைச்சு வியாழக்கிழமை (ஏப்ரல் 30) அறிக்கை மூலம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாசெலவுவரவுசெலவுத் திட்டம்