எரிபொருள் சிக்கனத்தில் கவனம் செலுத்தும் மலேசிய தீயணைப்புத் துறை

எரிபொருள் சிக்கனத்தில் கவனம் செலுத்தும் மலேசிய தீயணைப்புத் துறை

படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Apr 2026 - 4:47 pm

1 mins read

கோலாலம்பூர்: எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோகச் சிக்கல் காரணமாக மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சிக்கன நடவடிக்கைகளை அறிமுகம் செய்வதாக அதன் தலைமை இயக்குநர் நோர் ஹிஷாம் முஹம்மது தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அத்தகைய நடவடிக்கைகள் துறையின் செயல்பாட்டுத் தயார்நிலைகளைப் பாதிக்காதவாறு டீசல் மற்றும் பெட்ரோலின் பயன்பாடு சீரமைக்கப்படுவதை உறுதிசெய்யும் என்றார் அவர்.

அதேநேரம், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க உதவும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபடுமாறு துறையின் எல்லா மாநிலங்களின் இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“அவசரமான சூழ்நிலைகளில் தீணைப்பு வாகனங்களுக்கு எந்த ஓர் கட்டுப்பாடும் இல்லை. பணியாளர்கள் வழக்கம்போல தங்களது பணிகளில் ஈடுபடுவர். ஆனால், முக்கியத்துவம் இல்லாத நடவடிக்கைகளும் பயனீட்டு வாகனங்களின் சேவையும் குறைக்கப்படும்.

“அத்துடன் எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளையும் நாங்கள் கடைப்பிடிக்கிறோம்.

“அதிகாரிகளும் பணியாளர்களும் பயணம் செய்து பங்கேற்க வேண்டிய கூட்டங்களை இணையம் வாயிலாக நடத்துவதும் அதில் அடங்கும். இதுபற்றி எல்லா இயக்குநர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று திரு நோர் ஹிஷாம் சனிக்கிழமை (ஏப்ரல் 4) இரவு செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாதீயணைப்புநடவடிக்கை