போலி அழைப்புகளால் கடும் அதிருப்தியில் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை

போலி அழைப்புகளால் கடும் அதிருப்தியில் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை

1 mins read
225af299-0962-4e1a-99ac-60d8b31565a3
மலேசியத் தீயணைப்பு, மீட்புத் துறைக்கு இரண்டு நாள்களுக்கு ஒருமுறை போலி அழைப்பு ஒன்று வருகிறது. - படம்: ஏசியா நியூஸ் நெட்வொர்க்

ஜோகூர் பாரு: பினாங்கில் இருக்கும் தஞ்சோங் பூங்காவில் உள்ள காட்டில் தீப்பிடித்திருப்பதாகத் தீயணைப்பு, மீட்புத் துறைக்கு அழைப்பு ஒன்று வந்தது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு அப்படி தீ விபத்து எதுவும் நடக்கவில்லை என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

சராசரியாக, இந்தத் துறைக்கு இரண்டு நாள்களுக்கு ஒருமுறை போலி அழைப்பு ஒன்று வருகிறது. அத்தகைய அழைப்புகள் பெரும்பாலும் நள்ளிரவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ செய்யப்படுகின்றன.

இதனால், மிகவும் வருத்தமடைந்த அதன் இயக்குநர் நோர் ஹிஷாம் முகமது, அப்பிரச்சினையைக் கையாளுவதற்குப் பலமுனை அணுகுமுறையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

“கடுமையான அமலாக்கம், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் பயன்பாடு, பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வும் செயல்பாட்டு மேம்பாடுகளும் இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில் அத்தகைய அழைப்புகள் கிட்டத்தட்ட 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் இதனால் துறையின் நேரம், மனிதவள, எரிபொருள் ஆகியவை தேவையற்ற முறையில் வீணாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டில் தீயணைப்புத் துறைக்கு 141 போலி அழைப்புகள் வந்தன. அது 2024ஆம் ஆண்டில் 196ஆக உயர்ந்தது.

கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 255 அத்தகைய அழைப்புகளைப் பெற்றோம் என்றார் திரு நோர் ஹிஷாம்.

குறிப்புச் சொற்கள்