மலேசிய வெளியுறவு அமைச்சர் மியன்மார் பயணம்

மலேசிய வெளியுறவு அமைச்சர் மியன்மார் பயணம்

2 mins read
0fd8f07d-ede7-43ee-a254-c7770b59f712
மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான். - படம்: ஏஃப்பி

கோலாலம்பூர்: மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான் வியாழக்கிழமை (அக்டோபர் 9) மியன்மாருக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

மியன்மாரில் நடைபெற இருக்கும் தேர்தல் குறித்தும் முடங்கிக் கிடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்தும் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களுடன் அவர் கலந்துரையாடுவார் என்று மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆசியானுக்குத் தற்போது மலேசியா தலைமை தாங்குகிறது. அதன் அடிப்படையில் மியன்மார் தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வு காணும் முயற்சியில் திரு ஹசான் மியன்மார் தலைநகர் நேப்பிடாவுக்கு ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு அவர் மியன்மார் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹிலேங், மியன்மார் பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு கூறியது.

ஆசியான் கூட்டங்களில் கலந்துகொள்ள மியன்மாருக்கு 2022ஆம் ஆண்டிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் மக்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது.

அமைதித் திட்டம் தொடர்பாக தந்த வாக்கை அது நிறைவேற்ற தவறியதை அடுத்து ஆசியான் கூட்டங்களில் பங்கேற்க அதற்குத் தடை விதிக்கப்பட்டது.

மேலும், போராளி அமைப்புகளுக்கும் மியன்மார் ராணுவத்துக்கும் இடையே சண்டை மூண்டுள்ளதால் உள்நாட்டுப் போரால் அந்நாடு நிலைகுலைந்துள்ளது.

இந்நிலையில், முதல் சுற்று வாக்களிப்பு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்குகிறது.

ஆனால். இது வெறும் கண்துடைப்பு என்றும் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க ராணுவம் இலக்கு கொண்டுள்ளது என்றும் அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

தேசிய அளவில் நடைபெறும் இந்தத் தேர்தலில் சில கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன.

தேர்தலில் களமிறங்க சில எதிர்க்கட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேறு சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றன.

மியன்மாரில் நடைபெறும் தேர்தலுக்கு ஆசியான் முன்னுரிமை அளிக்கவில்லை என்று ஜூலை மாதத்தில் அமைச்சர் ஹசான் தெரிவித்திருந்தார்.

மியன்மாரில் அமைதிநிலையை மீண்டும் கொண்டு வருவதில் அந்நாடு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்